அசோலா‘ ஓர் அமுதசுரபி!

-திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்கிற விவசாயியின் அனுபவம் இது.
இவரைப்போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம்.
மாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கால்நடை களுக்கும் தீவனமாக பயன்படுவதுடன், நெல் வயலில் உரச்செலவை குறைத்து, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த அசோலாவுக்கு இருப்பதால், விவசா யிகளைப் பொறுத்தவரை இது ஓர் அமுதசுரபி!
''என்கிட்ட ஆறு கறவை மாடு இருக்கு. பால் மூலமா வர்ற வருமானத்தை வெச்சிதான் குடும்பத்தை ஓட்டிட்டிருக்கேன். தவுடு, புண்ணாக்கு எல்லாம் கலந்து வெச்சாதான் பால் அதிகமா குடுக்கும். ஒரு லிட்டர் பால் வித்தா, பத்து ரூவா கிடைக்கும். இதுல தீவன செலவுக்கே அஞ்சு ரூவா போயிருது. ஒரு நாளைக்கு புண்ணாக்கை போடாட்டி பாலோட அளவு குறைஞ்சிரும். இப்படி தீவன செலவு போக மிச்சமிருந்ததை வெச்சிதான் பொழப்பை ஓட்டிட்டிருந்தேன். இந்த நிலைமையிலதான் என்.ஜி.ஓ. அமைப்பைச் சேர்ந்தவங்க அசோலாவைப் பத்திச் சொன்னதோட பயிற்சியும் கொடுத்தாங்க.

முன்னல்லாம் தீவன செலவு பதினைஞ்சி ரூபாய் வரைக்கும் ஆகும். ஆனா, அசோலாவை கிலோ அறுபது பைசா செலவுல நானே உற்பத்தி செய்றதால செலவு ரொம்ப குறைஞ்சிருக்கு. பாலும் கூடுதலா கெடைக்குது. இதெல்லாம் அசோலா எனக்குக் கொடுத்த போனஸ்'' என்று தெம்பாகச் சிரிக்கும் முருகேசன்,
''என்னை பாத்துட்டு இப்ப பலரும் அசோலா உற்பத்தி பண்றாங்க. எங்க ஏரியாவுல இப்ப அசோலாவோட ஆட்சிதான் நடக்குது” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.
அசோலாவை தமிழக விவசாயிகளிடத்தில் அறிமுகம் செய்ததில் கன்னியாகுமரியில் உள்ள 'விவேகானந்தா கேந்திர'த்துக்கு முக்கிய இடம் உண்டு. இங்கே இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் என தனி அமைப்பே செயல்பட்டு வருகிறது. அதன் ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா, (தொலைபேசி: 04652 -246296) மலையாள வாசனையுடன் அசோலவைப் பற்றி விவரித்தார்.


''வளர்ப்புச் செலவைக் குறைக்கும் வகையில் செயற்கை நீர்தொட்டியை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம். மரநிழலில் ரெண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையா அடுக்கினால் தொட்டிபோன்ற அமைப்பு உருவாகும். அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்கவேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பசும்சாணியையும், இருபது கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை கரைத்துவிட வேண்டும். தொட்டியின் உள்பகுதியில் பத்து செ.மீ. உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் போதும். அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும். பத்து பதினைந்து நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம்.

வெப்பநிலை 25 முதல் 31 டிகிரி வரை இருக்கும்போது அசோலாவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெப்பநிலை அதிகமாகும் போது, வளர்ச்சி குறைந்து நிறமும் பழுப்பாக மாறிவிடும். தினமும் கையினாலோ... குச்சியாலோ தொட்டி யைக் கிளறிவிட்டு, அசோலாவை அறுவடை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இட நெருக்கடி இல்லாமல் அவை நன்றாக வளரும்” என்றவர், அடுத்து அதன் பயன்பாடுகள் பற்றி விவரித்தார்.
''அசோலா எல்லாச் சத்துக்களும் உள்ள ஒரு தீவனமாகும். குறைந்த அளவு லிக்னின் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இதை கால்நடைகள் மட்டுமல்லாமல் கோழி, மீன், பன்றி ஆகியவற்றுக்கும் உணவாக கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச் சாண வாடை இருக்கும். அதனால் நன்றாக கழுவிதான் கால்நடைகளுக்குக் கொடுக்கவேண்டும். தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் சரிபாதியாகக் கலந்து கொடுக்கலாம். ஒரு மாட்டுக்கு ரெண்டு கிலோ அளவில் தீவனமாக கொடுக்கும்போது 20% வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரம், மாட்டின் உடல் ஆரோக்கியம், வாழ்நாள் ஆகியவை அதிகரிக்கிறது. புண்ணாக்கு போன்ற தீவனத்தின் பயன்பாட்டை 40% வரை குறைக்கிறது.
கோழிகளுக்கு அசோலாவை நேரடியாக கொடுக்கும் போது முட்டையின் தரம் கூடுவதுடன் எண்ணிக் கையும் அதிகரிக்கிறது. அசோலா சாப்பிடும் கோழி களை பெரும்பாலும் நோய் தாக்குவதில்லை. ஆடு களுக்கு கொடுக்கும்போது ஆரோக்கியம் அதிகரிப் பதுடன் பாலின் அளவு கூடுகிறது. அசோலாவை உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு கொடுத்தால் எடை அதிகரிப்பதுடன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கும். பெரிய தொட்டிகளில் வியாபார ரீதியாக மீன் வளர்ப்பவர்கள், அசோலாவை உணவாகக் கொடுத்தால் அதிக எடையிலான மீன்கள் விரைவாகவே கிடைக்கும். முயலுக்கும் கூட அசோலாவைக் கொடுக்கலாம். இதன் பயன்ப £ட்டை சொல்லிக்கொண்டே போகலாம்'' என்று பெருமிதமாகச் சொன்னவர், ''அசோலா வளர்ப்பு சம்பந்தமான பயிற்சியை மாதம் இரண்டு தடவை கன்னியாகுமரியிலிருக்கும் எங்கள் கேந்திராவில சொல்லிக்கொடுக்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.400. தங்குமிடம், உணவு மற்றும் அசோலா வளர்ப்புக்கான பாலிதீன் ஷீட்கள் ஆகியவையும், விதைப்புக்குத் தேவைப்படும் அசோலாவையும் இலவசமாக கொடுப்போம்” என்று சொன்னார்.
ஆடு, மாடுகளுக்கு மட்டுமன்றி பயிருக்கும் பயன் தருவதாக வந்திருக்கும் அசோலா... உண்மையிலேயே அமுதசுரபிதான்!
கொசு விரட்டும் அசோலா!
அசோலாவில் அதிகளவு புரதச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், ஆகியவை அடங்கி யுள்ளன. அசோலாவில் நீர்ச்சத்து 90-92%, புரோட்டீன் 25-30%, அமினோ அமிலங்கள் 10-15% என்ற அளவில் உள்ளன. மிகக் குறைந்தளவு எண்ணெய் சத்தும், கார்போ-ஹைட்ரேட்டும் உள்ளன.
அசோலாவில் அதிகளவு புரதச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், ஆகியவை அடங்கி யுள்ளன. அசோலாவில் நீர்ச்சத்து 90-92%, புரோட்டீன் 25-30%, அமினோ அமிலங்கள் 10-15% என்ற அளவில் உள்ளன. மிகக் குறைந்தளவு எண்ணெய் சத்தும், கார்போ-ஹைட்ரேட்டும் உள்ளன.
ஏழைகளின் 'ஸ்பைருலினா' என அழைக்கப்படும் அசோலாவை மனிதர்களும் சாப்பிடலாம். அசோலாவை நன்றாக கழுவி பாலில் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடலாம். வடை, போண்டா வகைகளில் கீரைக்குப் பதிலாக அசோலாவை பயன்படுத்தலாம். கொழுப்பே இல்லை... முழுக்க புரதமே நிறைந்திருக்கிறது என்பதால் எந்த பயமும் இல்லை.
அசோலா வளர்க்கும் இடத்தில் கொசு வராது என்பதால், கொசுத் தொல்லை இருப்பவர்களும் இதை வளர்க்கலாம்.
நெல் நடவு செய்த ஒரு வாரத்தில ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ அசோலாவை போடவேண்டும். அது 25 நாட்களில் நன்றாக வளர்ந்து நிலம் முழுவதும் பரவிவிடும். இது நுண்ணுயிர் உரம் என்பதால் 30% உரச்செலவு குறையும். தண்ணீர் ஆவியாவது தடுக்கப் படும். களைகள் கட்டுப்படும். மகசூலும் கூடும்.
No comments:
Post a Comment