Tuesday, June 23, 2015

பசுந்தாள் உரங்கள்

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் - பசுந்தாள் உரங்கள்


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமானது மண்ணில் இருக்கும் இயற்கை ஊட்டங்களை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கிறது. பயிரின் ஊட்டச்சத்து தேவையையும், இயற்கை மற்றும் ரசாயன ஆதாரங்களின் மூலம் ஊட்டச்சத்துக்களையும் ஒருங்கிணைத்து பயிர்களுக்கு சமச்சீர் ஊட்டத்தை அளிக்கிறது. 
இயற்கையோடு ஒன்றிய, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய உன்னத உர உபயோக வழிமுறை தான் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகமாகும்.

"மண் வளத்தைப் பேணிக் காக்க மட்குத் தன்மையை அதிகரிப்பதாகும். அதிக மட்கும் தன்மையுள்ள மண் மிகுந்த வளமான மண்ணாகவும், ஈரம் காக்கும் தன்மையுடையதாகவும், பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நுண்ணுயிரிகளை பெருக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும். இத்தகைய மண்ணில் பயிரிடப்படும் பயிர்கள் முழு உற்பத்தித் திறனை வெளிக்கொணர்வதாக இருக்கும்.

மண்ணின் மட்குத் தன்மையை பசுந்தாள் உரப் பயிர்களை நிலத்தில் விதைத்து பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம், பசுந்தழைகள், தொழு உரம், மண் புழு உரம், பயிர்க் கழிவுகள் மற்றும் கால்நடைக் கழிவுகள் பயிர் உற்பத்திக்கு பயன்படுத்துவதன் மூலமும் அதிகரிக்கலாம்.

பசுந்தாள் உரங்களை இடும்பொழுது பயிர்களுக்குத் தேவையான சத்துக்களை அளிப்பது மட்டுமன்றி மண் வளம், கட்டமைப்பை மேம்படுத்தி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கத்துக்கும் வழிவகுக்கிறது.

சணப்பை, தக்கைப் பூண்டு, பில்லிபெசரா, சீமை அகத்தி, கொளிஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை மண்ணில் விதைத்து, பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும். இதனால், மண்ணில் தழைச்சத்து சேர்க்கப்படும் அளவு குறைவாக இருந்தாலும் தொடர் பயன்பாட்டின்போது மண்வளம் பெரிதும் மேம்படுத்தப்படுகிறது.

விவசாயிகளால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இயற்கை இடுபொருள் தொழு உரம் கால்நடைகளின் சாணம், தீவன மிச்சங்கள், வைக்கோல் மற்றும் இதர பயிர்க் கழிவுகளுடன் நன்கு மட்க வைக்கப்பட்டு மண்ணில் இடுவதால் பயிர் விளைச்சல் மற்றும் மண்ணின் தன்மை மேம்படுத்தப்படுகிறது.

நன்கு மட்கிய தொழு உரத்தை பயிர் விதைப்பிற்கு மூன்று வாரங்களுக்கு முன் மண்ணில் இட்டு நன்கு உழவு செய்வது உள்ளிட்டவைகள் மூலம் மண் வளம் பாதிக்காமல் பயிர்களுக்கு கிடைக்கும்.

No comments:

Post a Comment