Natural Hydroponics - lowcost
மண் இல்லாமல் பயிர் வளருமா? வளராது என்பதே நம்மில் பலருக்கும் தோன்றும் கருத்து. ஆனால், மண் இல்லாமல் பயிர் வளரும் என்பதை அறிவியல் நிரூபித்துவிட்டது. ஆஹா, அப்படியா? அது நிச்சயம் செலவு அதிகம் பிடிக்கும் விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைப்போம்.
இந்த மண் இல்லா தீவன வளர்ப்புக்கு...
* குறைந்த இடம்
* குறைந்த தண்ணீர்
* குறைந்த நேர கவனிப்பு
* குறைந்த உடல் உழைப்பு
* குறைந்த முதலீடு
* பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரம் எதுவும்
தேவையில்லை.
இப்படி குறைவாகப் பயன்படுத்தி, குறைந்த இடத்தில் அதிக அளவில் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் இதில் உள்ள வெற்றியே. இது எல்லாவற்றுக்கும் ஒன்றே ஒன்றுதான் வேண்டும். அது, விடாமுயற்சி.
எங்கள் வீட்டு மாட்டுக்கொட்டகையில் 10 * 8 அடிக்கு ஓர் இடம் இருந்தது. ஓடு வேய்ந்த இடம். ஓட்டுக் கூரை தூசி கீழே விழாமல் இருக்க, சீலிங்குக்குப் பச்சை நிழல் வலை அடித்தேன். உள்ளே வெளிச்சம் வர வேண்டும், ஆனால் உள்ளே இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் மாறக்கூடாது என்பதற்காக ஒளி ஊடுறுவும் கனமான பாலிதீன் ஷீட்டால் சுற்றிலும் மூடி, உள்ளே சென்று வர ஒரு கதவு. இதுதான் மண் இல்லா தீவன வளர்ப்புக்காக நான் அமைத்துக்கொண்ட அறையின் அமைப்பு.
இந்த முறைக்கு செங்குத்தான விவசாயம் (Vertical Farming) என்று பெயர். ஆகவே, இதில் தட்டுகளை வைக்க ஸ்டாண்ட் (Stand) செய்தேன். இந்த ஸ்டாண்டின் ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் இடையே ஒரு அடி உயர இடைவெளி தேவை. மொத்த ஸ்டாண்டின் உயரம் ஆறு அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஸ்டாண்டின் நீளம், அறையின் அளவு மற்றும் அமைப்பைப் பொறுத்து மாறுபடும். இதுதவிர, ஒரு அடிஅகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகள் (டிரேக்கள்) தேவை. தண்ணீர் தெளிக்க ஸ்பிரேயர், விதைகளை ஊறவைக்க பிளாஸ்டிக் வாளி, முறைப்பு கட்ட கோணிச் சாக்கு, ஈரப்பதம் மற்றும் குளிர் நிலையை அறிய ஒரு தெர்மாமீட்டர் ஆகியவையும் தேவை.
மக்காச்சோளம், கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளை இந்த மண் இல்லா தீவன முறையில் வளர்க்கலாம். இதில், சிறிய விலை ஏற்ற இறக்கத்துடன் ஆண்டு முழுவதும் கிடைப்பது மக்காச்சோளம் மட்டுமே. கோதுமை, பார்லி இரண்டும் விலை அதிகம். சோளம் பயிரிட்டால், இளம் சோளப் பயிரில் நச்சுத்தன்மை இருக்கும். அதனால், அதைத் தவிர்ப்பது நல்லது. கம்பு, ராகி போன்ற சிறுதானியப் பயிரில் போதுமான பயிர் வளர்ச்சி கிடைக்கவில்லை. ஆகவே, மண் இல்லா தீவன வளர்ப்புக்கு மக்காச்சோளமே சிறந்தது.
விதைகளை விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும் மக்காச்சோள விதைகளை வாங்காதீர்கள். விவசாயிகளிடம் கிடைக்கும் மக்காச்சோளமே போதும். புதிய, நன்கு, காய்ந்த, பூசனம் பிடிக்காத, நன்கு விளைந்த, முனை முறிந்து உடையாத மக்காச்சோளத்தை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் மக்காச்சோளமே நன்கு முளைத்து அதிகபட்ச தீவனத்தை கொடுக்கும். ஆப்ரிக்கன் டால் எனப்படும் தீவன மக்காச்சோள ரகத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். ஆனால், ஆப்பிரிக்கன் டால் மக்காச்சோள விதை எல்லா இடத்திலும், வருடம் முழுவதும் கிடைப்பதில்லை. இருப்பதில் சிறந்தது மக்காச்சோளமே. இல்லை, வேறு தானியத்தைத்தான் பயன்படுத்துவேன் என்று சொல்பவர்கள், சோளத்தை மட்டும் தவிர்த்து வேறு எந்தத் தானியத்தையும் தனது வசதி வாய்ப்புக்கு ஏற்ப விளைவிக்கலாம். அது அவரவர் விருப்பம்.
அடுத்த தேவை, வளர்ப்பு அறை. அளவான எண்ணிக்கையில் பசுக்கள் இருந்தால், பசுக்கள் இருக்கும் கொட்டகையிலேயே ஒரு இடம் போதும். பத்து பசுக்களுக்கு மேல் இருந்தால், கிரீன் ஹவுஸ் எனப்படும் பசுமைக் கூடாரம் அமைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் நீடித்த, நிலைத்த உற்பத்தியை எடுக்க முடியும். சூரிய ஒளி நன்கு கிடைக்கக்கூடிய இடத்தைத் தேர்வு செய்யுங்கள். பயிர் வளர்ச்சிக்கு சூரிய ஒளி மிக மிக அவசியம். சூரிய ஒளியைக் கடத்தக்கூடிய, புற ஊதாக் கதிரால் பாதிப்பு ஏற்படுத்தாத கெட்டியான பாலித்தீன் ஷீட்டால் சுற்றி மூடலாம். அல்லது 90 சதவீத பச்சை வலையையும் பயன்படுத்தலாம். ஒளி உட்புக வேண்டும். அதே சமயம், வளர்ப்பு அறைக்குள் இருக்கும் குளிர் நிலையும், காற்றின் ஈரப்பதமும் வெளியேறக்கூடாது.
உங்கள் வசதிக்கு ஏற்ப, நீள அகலத்தில் ஸ்டாண்டுகளை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆள் உயரத்துக்கு மேல் ஸ்டாண்ட் இருந்தால் வேலை செய்வது சற்று கஷ்டமாக இருக்கும். ஸ்டாண்டுகளை இரும்பு அல்லது பிவிசி பைப் அல்லது மரத்தால் செய்துகொள்ளலாம். தினமும் பலமுறை தண்ணீர் தெளிக்கப்படுவதால், தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத பொருள்களால் ஸ்டாண்ட் அமைத்துக்கொள்வது நல்லது. வளர்ப்பு அறை எப்போதும் குளுகுளுவென்று இருக்க வேண்டும். அதற்காக, பயிர் வளர்ப்பு அறையின் தரையில் குறைந்தது அரை அடி உயரத்துக்கு ஆற்று மணல் போட வேண்டும்.
அறையும் ஸ்டாண்டுகளும் தயார். ஒரு அடிஅகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டுகளின் அடியில் 3.5 மில்லிமீட்டர் அளவுள்ள 12 துளைகள் இட வேண்டும். அதிகப்படியான தண்ணீர் இந்தத் துளைகள் வழியே வெளியேற வேண்டும்.
பயிர் வளர்ப்பு முறை...
ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள தட்டு ஒன்றுக்கு 300 கிராம் அளவுக்கு மக்காச்சோள விதை போதுமானது. மக்காச்சோளத்தின் திரட்சி மற்றும் சைஸை பொறுத்து, இந்த அளவைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம். நமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை தட்டுகள் தீவனம் தேவையோ அதைப்போல் எட்டு மடங்கு தட்டுகள் வாங்க வேண்டும். உதாரணமாக, நமது ஒரு நாளைய தேவை பத்து தட்டுகள் தீவனம் என்றால், 80 தட்டுகள் வாங்க வேண்டும்.
பத்து தட்டுகளுக்குத் தேவையான மூன்று கிலோ மக்காச்சோளத்தை நன்கு நீரில் மூழ்கும்படி ஒரு பிளாஸ்டிக் வாளியில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். இந்த ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்துப் பார்த்தால், விதைகளில் சிறு முளை விட்டிருக்கும்.
முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்கு சுமார் 300 கிராம் வீதம், இடைவெளியின்றி, ஆனால் ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி, சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்கவும். பிறகு, தட்டுகளை வளர்ப்பு அறைக்கு எடுத்துச் சென்று ஸ்டாண்டில் அடுக்கி வைத்து, ஸ்பிரேயர் மூலம் தண்ணீரை புகைபோல் தெளிக்க வேண்டும். தண்ணீரை ஊற்றிவிடக்கூடாது. மண் இல்லா தீவன வளர்ப்பில் தண்ணீர் தெளிப்பது மிகவும் கவனமாகச் செய்ய வேண்டிய பணி. தண்ணீரின் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் கெடுதல்தான். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் மாறாமல் வைத்திருக்க வேண்டும். சிறிய அளவிலான கைத்தெளிப்பான், பூச்சி மருந்து தெளிக்கப் பயன்படும் கையால் இயக்கும் தெளிப்பான், மிஸ்ட் தெளிப்பான் அல்லது ஃபோக்கர் (Fogger) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மண் இல்லா தீவனப் பயிருக்குத் தண்ணீரின் தேவை குறைவுதான். ஆனால், அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிக அவசியம்.
அறையின் வெப்ப நிலை 24 - 25 டிகிரி வரையிலும், காற்றின் ஈரப்பதம் (Relative Humidity) 80 - 85 சதவீதமாகவும் பராமரித்தால், விளைச்சல் பிரமாதமாக இருக்கும். அளவுகள் கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் பெரிய பாதிப்பு இல்லை. அறையின் வெப்ப நிலையைக் குறைக்க, அறையின் தரையில் மணல் பரப்ப வேண்டும். வசதி இருந்தால் ஏர்கூலர் பயன்படுத்தலாம். ஏர்கூலர் பயன்படுத்தினால் பயிர் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மக்காச்சோளத்தை மண்ணில் விதைத்து தண்ணீர் தெளித்து வந்தால், வெள்ளி ஈட்டிபோல் முளைத்து வர ஏழு முதல் எட்டு நாட்களாகும். ஆனால், மண் இல்லா தீவன வளர்ப்பு முறையில் ஏழு நாட்களில் 25 முதல் 30 செ.மீ. உயரப் பயிராக வளர்ந்துவிடுகிறது. கீழே வேர்களெல்லாம் பின்னிப்பிணைந்து வெள்ளை மெத்தைபோல் ஆகிவிடும். போடப்படும் விதையின் எடையைவிட எட்டு மடங்கு எடையில் தீவனம் கிடைப்பது, வெறும் ஏழு நாள்களில் நடைபெறும் அதிசயம்.
பெரிய பிளாஸ்டிக் தட்டுகளில் வளர்த்தால், மாடுகளுக்கு எடுத்துப் போடுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். ஒரு அடிஅகலம், ஒன்றரை அடி நீளம், மூன்று அங்குலம் உயரம் உள்ள பிளாஸ்டிக் தட்டு என்பதால் ஆடு, மாடு, கோழி என நம் வீட்டுப் பிராணிகளுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதை எளிதில் முடிவு செய்துவிடலாம்.
மண் இல்லா தீவன வளர்ப்பு முறையில், ஆண்டு முழுவதும் தினமும் ஒரே அளவில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யலாம். இந்த அமைப்பை எங்கு வேண்டுமானாலும் நிறுவி, தீவனம் தயார் செய்ய முடியும். தண்ணீரின் தேவை மிக மிகக் குறைவு. பச்சைப் பசேல் என்று இருக்கும் தீவனம், வருடம் முழுவதும் ஒரே சுவை, ஒரே சத்துடன் கால்நடைகளுக்குக் கிடைக்கும்.
மக்காச்சோளத்தை மாவாக்கிப் போடுவதைவிட, இவ்வாறு முளைக்க வைத்துப் போடுவது கால்நடைகளுக்கு நல்லது. ஹைட்ரோஃபோனிக்ஸ் எனப்படும் மண் இல்லா பசுந்தீவனத்தில் உள்ள சத்துகள்...
புரதம் - 35.5 சதவீதம்
ஈதர் - 3.4 சதவீதம்
ஈரப்பதம் - 84 சதவீதம்
சாம்பல் - 3.6 சதவீதம்
நார்ச்சத்து - 15.2 சதவீதம்
நார்ப்பொருள் - 19 சதவீதம்
தழைச்சத்து - 61.3 சதவீதம்
மெட்டபாலிசபிள் சத்து - 11.40 மிகி/கிலோ
வைட்டமின் பி1 - 0.2 மிகி/100 கிராம்
வைட்டமின் ஏ1 - 0.4 மிகி/100 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 1.50 மிகி/100 கிராம்
செம்புச் சத்து - 1.30 மிகி/100 கிராம்
இரும்புச் சத்து - 7.2 மிகி/100 கிராம்
பொட்டாசியம் - 180 மிகி/100 கிராம்
மக்னீசியம் - 150 மிகி/100 கிராம்
சோடியம் - 36 மிகி/100 கிராம்
பாஸ்பரஸ் - 150 மிகி/100 கிராம்
துத்தநாகம் - 4.6 மிகி/கிராம்
மண் இல்லா தீவனப் பயிரின் இலை, வேர், விதைப்பகுதி என மூன்றையும் பசுக்கள் நன்றாக அசைபோட்டு ஜீரணம் செய்கின்றன. மண்ணில் பயிர் நடவு செய்து 25 - 30 செமீ உயரம் வளர்ப்பதற்கு எவ்வளவு தண்ணீர் செலவு செய்கிறோமோ அதில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி அதே அளவு தீவன மகசூல் எடுக்க முடியும். அதனால், கடும் வறட்சி நிலவும் இடங்களிலும், காலங்களிலும்கூட பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும். தினமும் விலை உயர்ந்துகொண்டே போகும் அடர் தீவன செலவைக் குறைக்கலாம். உற்பத்தி செலவு குறைவதால், கால்நடைகள் மூலம் பால் உற்பத்தி செய்பவர்களுக்குக் கிடைக்கும் நிகர லாபம் அதிகரிக்கும்.
மண் இல்லா தீவன உற்பத்தியை சிறிய அளவு, பெரிய அளவு என்று இல்லாமல் எந்த அளவிலும் இதனை உற்பத்தி செய்யலாம். பெரிய பண்ணையாளர்களால்தான் முடியும், சிறிய அளவு விவசாயிகளுக்குச் சாத்தியமே இல்லை என்பது இங்கே கிடையாது. மனம் இருந்தால் எல்லோராலும் சாத்தியமே.
அசைபோடும் பிராணிகளோடு அசைபோடாத முயல், குதிரை, பன்றி போன்றவற்றுடன் கோழி, வான்கோழி, வாத்து போன்றவற்றுக்கும் தீவனமாகக் கொடுக்கலாம். அனைத்துக்கும் மேலாக, இதை 100 சதவீதம் இயற்கையாகவே உற்பத்தி செய்யலாம். 19:19:19 தண்ணீரில் கரையும் ரசாயன உரத்தைத் தெளித்தால் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால், இந்தக் கலவை அதிகமாகப் படுகிற இடத்தில் பயிர் கருகிவிடும். இதற்குப் பதிலாக, பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யம் கலந்து தெளிக்கலாம். அல்லது, திறமிகு நுண்ணியிரி (Effective Micro Organism) கரைசலை தெளித்து இயற்கையாகவே வளர்க்கலாம்.
இந்தப் பசுந்தீவனத்தைப் பசுக்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், பாலின் அளவு அதிகரிக்கும். சுவையும் கூடும். வெண்ணெய்யின் அளவும் அதிகரிக்கும். சினை பிடிப்பது எளிதாகும். உடல் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
பனி மூடிய நிலையில் பசுந்தீவனம் கிடைக்காத சூழல் வரும்போது தீவனத்தை உற்பத்தி செய்ய ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் பல காலமாக இந்த முறை தொழிற்சாலைபோல் செயல்பட்டு வருகிறது. அதன் அமைப்பு... செலவு... எல்லாம் கற்பனைக்கு எட்டாதது. எல்லோரும் செய்ய இயலாதது. ஆனால், மிகக் குறைந்த செலவில், குறைந்த இடுபொருளில் தீவனம் வளர்க்கும் இந்த முறையானது, சாதாரண மக்களும்கூட செய்யக்கூடியது.
இன்று தமிழகத்தில் ஆங்காங்கே செய்யப்பட்டு வரும் இந்த மண் இல்லா தீவன வளர்ப்பு, நிச்சயம் தீவன உற்பத்தியில் ஒரு மௌனப் புரட்சி செய்யும் என்பதில் ஐயமில்லை.
No comments:
Post a Comment