1கிலோ ரூ.250-க்கு விற்பனையாகும் நாவல் பழம்!
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை, விதை என அனைத்துமே மருத்துவக் குணங்கள் கொண்ட காரணத்தாலும், நாவல் மரங்கள் குறைந்து வருவதாலும், அதன் பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ. 250-க்கு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்படாதவர்கள் அரிதாகிவிட்ட நிலையில், நாவல் பழமும், விதைகளும் படிப்படியாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிறந்த மருந்தாக அறியப்பட்டுள்ளதால், அவற்றின் மதிப்பு தற்போது பன்மடங்கு உயர்ந்துவிட்டது.
நீரிழிவு நோய் தவிர, பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் குணமும், தொண்டைப் புண், தொண்டை அழற்சி போன்ற தொந்தரவுகளைப் போக்குவதற்கும் நாவல் மரப்பட்டைகள் உதவுகின்றன.
சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவோர் நாவல் பழங்களை பிழிந்து சாப்பிடுவதன் மூலம் குணமடைகின்றனர். நாவல் பழத்துக்கு சிறுநீர் பெருக்கம், பசியைத் தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளைச் சுத்தம் செய்யும் தன்மையும், குடல், இரைப்பை, இதயத்தின் தசைகளை வலுவாக்கும் குணமும் நாவல் பழத்துக்கு உள்ளது.
அதோடு, நாவல் பழச்சாற்றுக்கு நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணமும், நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. மேலும், ரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் பழம் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அனைவராலும் மிகச் சாதாரணமாகக் கருதப்பட்ட நாவல் பழத்துக்கு இத்தகைய மருத்துவக் குணங்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு தற்போது அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார் இயற்கை விவசாயி ஜி.எஸ். தனபதி.
இதுகுறித்து புதுகை உழவர் சந்தை அருகே பழ வியாபாரம் செய்யும் பெண் கூறியது:
நாட்டு நாவல் மரங்களில் இருந்து ஆடிக்காற்றில் கீழே விழும் பழங்களைத்தான் கிராமங்களில் விற்று வந்தோம். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மிகுந்த முக்கியத்தும் கிடைத்துள்ளது. அதை வாங்குபவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நாவல்பழம் உள்ளூரின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாததால், ஆந்திர மாநிலத்திலிருந்து திருச்சி காந்தி சந்தைக்கு வரும் நாவல் பழங்களை வாங்கிவந்து விற்கிறோம். ஒரு கிலோ ரூ. 200-க்கு வாங்கி ரூ. 250-க்கு விற்க வேண்டியுள்ளது. எனினும், இதை வாங்கிச் செல்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றார் அவர்.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment