Showing posts with label கீரை. Show all posts
Showing posts with label கீரை. Show all posts

Tuesday, September 20, 2016

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

ஒரு ஏக்கர்... மாதம் 50 ஆயிரம்...

கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்!
தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, கூலியாட்கள் தட்டுப்பாடு... என விவசாயத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். இத்தனையையும் தாண்டி விவசாயம் செய்ய வேண்டுமென்றால், புதிய தொழில்நுட்பங்கள் கண்டிப்பாகத் தேவை. இதை சரியாகப் புரிந்து கொண்ட விவசாயிகள் பலரும் நவீன கருவிகளைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த வகையில், குறைந்த நேரமே கிடைக்கும் மின்சாரத்தையும், குறைந்தளவு தண்ணீரையும் வைத்து பாசனம் செய்யவும், பல நவீன கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தெளிப்பு நீர்ப் பாசனம். இந்த முறையில், பாசனம் செய்து கீரை சாகுபடி செய்து வருகிறார், ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகேயுள்ள கரிச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பொன்னுசாமி.
மனைவி சிவகாமி மற்றும் மகன் சதீஷ்குமார் ஆகியோருடன் இணைந்து, கீரை வயலில் வேலையாக இருந்த பொன்னுசாமியை சந்தித்தோம்.

'சுளீர் சுளீர்’ என சுழன்று பூமியில் இருந்து புறப்பட்ட ஊற்றுகள் போல, தண்ணீரைத் தூவிக்கொண்டு இருந்தன ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த தெளிப்பு நீர்க் கருவிகள்.
குளிப்பாட்டி தலை துவட்டிய குழந்தையின் குதூகலம் போல பளிச்சென பசுமைக் கட்டி இருந்தன கீரைச் செடிகள்.
அதைப் பெருமிதமாகப் பார்த்தவாறே நம்மிடம் பேசத் தொடங்கினார், பொன்னுசாமி.
''கொங்கு நாட்டின் நெற்களஞ்சியம்னு கோபிச்செட்டிபாளையம் பகுதியை சொல்லுவாங்க. அந்தளவுக்கு வளமான பகுதி. ஆனா, அதே தாலூகாவோட தெக்கு பக்கம் இருக்கற எங்க பகுதி வானம் பாத்த பூமி. ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் எதுவும் இங்க இல்ல. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனத்தை மட்டுமே நம்பித்தான் வெள்ளாமை.
ஆயிரம் அடிக்கும் மேல, போர் போட்டு கிடைக்கிற கொஞ்ச தண்ணீரை வெச்சுதான் வெவசாயம் செய்றோம்.
போதுமான தண்ணி இல்லாததால, கிடைக்கற தண்ணியை வெச்சு பிஞ்சு வெள்ளாமையா கீரையை சாகுபடி செய்றேன். ஆரம்பத்துல வாய்க்கால் பாசனம்தான் செஞ்சேன். வாய்க்கால்ல ஓடி, வயலை அடையுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அந்த மாதிரி சமயத்துலதான் ஒருநாள் உழவர் சந்தையில ஒரு விவசாயி, சொட்டுநீர்ப் பாசனத்தைப் பத்தி சொன்னாரு.
வாய்க்கால் பாசனத்துல ஒரு ஏக்கர் பயிருக்கு போற தண்ணியை... சொட்டுநீர்ப் பாசனம் மூலமா மூணு ஏக்கருக்குப் பாய்ச்சிடலாம்னு அவர் சொன்னது, எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அவர்கிட்ட சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கிற கம்பெனியோட அட்ரசை வாங்கிட்டு, அடுத்த நாளே, மகன் சதீஷ்குமாரோட அங்க போய் விவரம் கேட்டேன்.
என்னோட வயல், கிடைக்கிற தண்ணி, வெள்ளாமை எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, 'உங்களுக்கு தெளிப்புநீர்ப் பாசனம்தான் தோதா இருக்கும்’னு சொன்னாங்க. அந்தக் கருவியை அமைச்சுருக்கற சில வயல்களையும் கூட்டிக்கொண்டு போய் காட்டுனாங்க.
எங்களுக்கும் அது திருப்தியா தெரியவும், ஒரு ஏக்கர் கீரை சாகுபடிக்கு ஏத்த அளவுக்குத் தேவையான கருவிகளை வாங்கிட்டு வந்து நாங்களே போட்டுக்கிட்டோம். 15 அடி இடைவெளியில 4 அடி உயரத்துக்கு மரக்குச்சிகளை நட்டு, அதுல ரெண்டரை அடி உயரமுள்ள குழாய்களை அசையாம இருக்கற மாதிரி கட்டி விட்டோம்.
குழாய் முனையில பட்டாம்பூச்சி நாசிலைப் பொருத்தினோம். தண்ணியைப் பீச்சி அடிக்கிற இந்த நாசில் பட்டாம்பூச்சியோட றெக்கை மாதிரியே இருக்கும். அதனால, 'பட்டாம்பூச்சிப் பாசனம்'னுதான் எங்க பக்கம் சொல்லுவாங்க. இதுக்கு அரசு மானியம் கிடையாது.
15 அடி இடைவெளியில ஒரு ஏக்கர் நிலத்துல பட்டாம்பூச்சிப் பாசனம் அமைக்கறதுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவாகும்'' என்று விவரங்களைத் தெளிவாகத் தந்தார் பொன்னுசாமி!
பூச்சிகளை விரட்டும் தெளிப்புநீர் !
அப்பாவைத் தொடர்ந்த மகன் சதீஷ்குமார், ''5 ஹெச்.பி. போர்வெல் மோட்டார் மூலமாதான் பாசனம் செஞ்சுட்டிருந்தோம். அதுல ஒரு ஏக்கர் பாசனம் செய்ய குறைஞ்சபட்சம் 6 மணிநேரம் ஆகும். அந்தளவுக்கு பாசனம் செய்றதுக்கு எங்க கிணத்துல தண்ணியும் இல்லை.
கரன்ட்டும் அவ்வளவு நேரம் கிடைக்காது. ஆனா, பட்டாம்பூச்சிப் பாசனம் அமைச்ச பிறகு, அந்தக் கவலையே இல்லை. செங்கீரை, புதினா, அரைக்கீரை, மணத்தக்காளி, சிறுகீரைனு அஞ்சு வகையான கீரைகளைப் பயிர் பண்றோம்.
ஒரு ஏக்கர் நிலத்தை ரெண்டா பிரிச்சு, அதுல தனித்தனியா சாகுபடி பண்றதால சுழற்சி முறையில தினமும் கீரையை அறுவடை பண்றோம். இந்தக் கீரைகள்ல சிறு கீரையைத் தவிர மத்த நாலு கீரைகளும் மறுதழைவு ரக கீரைங்க. வெட்ட வெட்ட தழைஞ்சுட்டே இருக்கும்.
அடியுரமா கோழி எரு, தொழுவுரம் ரெண்டையும் போடுறோம். மேலுரமா யூரியா கொடுப்போம். ஆனா, பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கறதே இல்லை. அதுக்கும் காரணம், பட்டாம்பூச்சிப் பாசனம்தான்.
தினமும் ஒரு மணி நேரம் பூவாளித்தூவல் போல பத்தடி சுத்தளவுக்கு தண்ணி பீச்சி அடிக்கிறதால, இலைகள் எல்லாம் கழுவிவிட்ட மாதிரியாகிடுது.
இலை வழியா செடியைத் தாக்குற பச்சைப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன், முட்டைகள்னு எல்லாத்தையும் பீச்சி அடிக்குற பாசன தண்ணி கழுவிடுறதால செடிகள்ல பூச்சிகளே இருக்குறதில்லை. அதனால பளபளனு தரமான கீரை கிடைக்குது'' என்று சிலாகித்துச் சொன்னார்.
கட்டு இரண்டு ரூபாய் !
தொடர்ந்து பேசிய சதீஷ்குமார், ''கீரையை திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில கொண்டு போய் அப்பா வித்துட்டு வந்துடுவார். ஆரம்பத்துல டவுன் பஸ்லதான் கீரைக்கட்டுகளைக் கொண்டு போனோம்.
பட்டாம்பூச்சிப் பாசனத்துக்கு மாறுன பிறகு, அதிக மகசூல் கிடைக்குது. சுழற்சி முறையில அறுவடை பண்றதால தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்குது.
இப்ப சொந்தமா மூணு சக்கர டெம்போ வாங்கி, அதுலதான் கொண்டு போறார். ஒரு சின்னக்கட்டு ரெண்டு ரூபாய்னு விக்குறோம். நேரடியா விக்கிறதால கூடுதலா லாபம்'' என்றார் குஷியான குரலில்!
தினமும் 2,600 ரூபாய் !

நிறைவாகப் பேசிய பொன்னுசாமியின் மனைவி சிவகாமி, ''இந்த தெளிப்புநீர்ப் பாசனம் மட்டும் இல்லீனா, நாங்க இந்த மண்ணை விட்டே போயிருப்போம்.
எங்க நாலு ஏக்கர் நிலத்துல மட்டும் 11 போர்வெல் போட்டோம். எல்லாமே 900 அடி ஆழம். ஆனா, எதுலயுமே சரியான தண்ணி கிடைக்கல. பத்து லட்சம் ரூபாய் கடானாளியானதுதான் மிச்சம். இருந்தாலும் நம்பிக்கையை விடாம கடைசியா தோண்டுன கிணத்துல ஓரளவு தண்ணி வந்துச்சு. 'அதை வெச்சு பெரிசா வெள்ளாமை பண்ண முடியாது. கீரை போட்டா ஜெயிக்கலாம்’னு சொந்தக்காரர் ஒருத்தர் சொன்னாரு. அதும்படியே செஞ்சோம். ஓரளவு பொழப்பு ஓடுச்சு.
அப்புறமா தெளிப்புநீருக்கு மாறின பிறகுதான், மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்குது. இதுல செலவெல்லாம் போக மாசத்துக்கு சராசரியா 50 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைச்சுடும். இதை வெச்சே பழையக் கடனையும் கட்டிட்டோம். நாங்க இந்த அளவுக்கு முன்னேற முக்கியக் காரணமே பட்டாம்பூச்சிப் பாசனம்தான்'' என்று நெகிழ, கீரைச்செடி போல நம் மனதும் நனைந்தது!!
தொடர்புக்கு, சதீஷ்குமார், செல்போன்: 98658-37804

50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்

50 சென்ட்... மாதம் 30 ஆயிரம்... பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!

இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்...
கூட்டுப் பண்ணையில் கீரைகள்...
விரைவில் இயற்கை விவசாயச் சந்தை...
விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து... பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்... பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்... ஆச்சர்யம்தானே!

சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். 'நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி,  பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்... ஜெகன்னாதன், கௌதம், ராதாகிருஷ்ணன், சலோமிஏசுதாஸ், ராமு, விசு, திருமலை, புனிதா, ஷாம், சிவகுமார், ராஜமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!
திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து... சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.
பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த ஜெகன்னாதன், ''கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட சர்வே பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருஷத்துக்கு 1 கோடியே
60 லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது.  படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்... சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப... ரொம்ப வருத்தமா இருந்துச்சு.
இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்... இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு. இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.
இணைத்த இயற்கை!
அப்போ பன்னாட்டு கம்பெனியில வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல... நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது. அவங்களையெல்லாம் இணைச்சு... இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.
மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல... நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே... ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (ஜெகந்நாத், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்... கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாஸ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொஸைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்). மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.
இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக... 'நல்ல சந்தை’னு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம். இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்'' என்றார் ஜெகன்னாதன்!
''கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட... பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப... சில நேரங்கள்ல கீரைகள்  இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா... அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.
பொதுவா... காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே சீசன் இருக்கு. அந்தந்த சீஸன்லதான்... அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு சீஸன்லயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ªன்ன தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது. அதனால, அந்தந்த சீஸன்ல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் சீஸன் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க'' என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன்.
விதவிதமா இருக்குது, கீரை!
''முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக் காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை... இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்'' என்று பட்டியலிட்ட முழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம் சொன்னார்.
நிறைவாகப் பேசிய கௌதம், '' ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா... மூணு, நாலு தடவை சாகுபடி பண்ணலாம். ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்க முடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோட இடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.
ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விஷயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே... கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற
5 ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே... பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்'' என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.

தெளிப்புப் பாசனம்தான் நல்லது !
கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை !

'கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.
பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய... தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !
வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி
40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.
பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.
கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்... மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'
தெளிப்புப் பாசனம்தான் நல்லது !
கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை!
'கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.
பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய... தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !
வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி
40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.
பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.
கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்... மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'
 தொடர்புக்கு,
ஜெகன்னாதன், செல்போன்: 99626-11767
கௌதம், செல்போன்: 98406-14128
ராதாகிருஷ்ணன், செல்போன்: 97898-40630

Wednesday, May 27, 2015

பணம் கொட்டும் கற்றாழை சாகுபடி!

பணம் கொட்டும் கற்றாழை சாகுபடி!


கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருத்துவச் செடி. அழகுசாதன, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. எனவே, இந்தத் திட்ட அறிக்கையில் கற்றாழை சாகுபடி மற்றும் அதிலிருந்து ஜெல் பிரித்து எடுப்பது குறித்து பார்க்கலாம். குறிப்பாக, சொந்த நிலம் உள்ள விவசாயிகள் மேற் கொள்ள ஏதுவான தொழில் என்றாலும், குத்தகை நிலம் மூலமும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும்.
வணிக ரீதியாக பயிரிட்டால் நல்ல வருமானம் நிச்சயம் என்றாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லை என்பதால் கற்றாழை சாகுபடி குறித்து யோசிப்பதில்லை. வேளாண்மைத் துறை வழிகாட்டுதல்கள் மற்றும் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பவர்களுடன் கூட்டுவைத்துக் கொள்ளும்போது நல்ல வருமானம் கிடைக்கும் என்பது உண்மை.
                                                                                                                                               Aloe Plantation.jpg
கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத் தன்மையைப் பாதுகாத்து சருமத்துக்கு கூடுதல் பொலிவையும் தருகிறது என்பதால் இதன் ஜெல்லை ஷேவ் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. தவிர, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன் படுகிறது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக் காயங்கள் ஆகியவற்றுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
ரகங்கள்!
கற்றாழையில் குர்குவா, சாகோட்ரின், கேப் என மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் முதல் இரண்டு வகைகள் பார்பலோயின் (Barbaloin) மற்றும் அலோ எமோடின் ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றி லிருந்து வலி நிவாரணி மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கேப் கற்றாழை கால்நடை மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.
மண் மற்றும் தட்பவெப்பநிலை!
வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளரும். எனினும் 25 – 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளிலும் பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் ராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்வதற்கு ஏற்றது. தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும், எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையைச் சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
விதையும் விதைப்பும்!
தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து வாங்க வேண்டும். இந்தக் கன்றுகள் அனைத்தும் ஒரே அளவில் இருந்தால்தான் செடிகள் சீராக வளர்ந்து ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை வாங்கிவந்து அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடம் நனைத்தபிறகு நடவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செடி அழுகல் நோயிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
கற்றாழையைத் தனிப் பயிராக சாகுபடி செய்யும்போது ஹெக்டேருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும். வளர்ந்த செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்து இருக்கும் என்பதால் காய் மற்றும் விதைகள் வராது. இதனால் கற்றாழையைப் பக்கக் கன்றுகள் மூலமாகத்தான் பயிர்ப்பெருக்கம் செய்ய வேண்டும்.
சாகுபடி பருவம்!
வருடத்துக்கு இரண்டு பருவங்களில், அதாவது ஜூன் – ஜூலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் இலையி லிருந்து தரமான ஜெல் கிடைக்கும். இதற்காக செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. என்றாலும், கூடுதல் நிலம் உள்ளவர்கள் இரண்டு மாதங்களுக்கு ஓர் அறுவடை எடுப்பதுபோல சுழற்சி முறையிலும் மேற்கொள்ளலாம்.
நிலம் தயாரித்தல்!
நிலத்தை இரண்டுமுறை உழவேண்டும். ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, நிலத்தைச் சமன் செய்து சிறிய சிறிய பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். செடிகள் வாளிப் பாக வளர்வதற்கு ஏற்ப ஒவ்வொரு செடிக்கும் மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு!
வளமான நிலம் எனில் தொழு உரம் மட்டும் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து உரம் கொடுக்க வேண்டும். இதனால் செடிகள் வாளிப்பாக வளர்வதுடன் அதிக ஜெல் கொண்ட இலைகள் கிடைக்கும்.
கற்றாழையை மானாவாரிப் பயிராக வும் பயிர் செய்யலாம். அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்த் தேவையைக் கவனித்துக் கொண்டால் போதும். கற்றாழை செடியில் அதிகப் பூச்சிநோய் தோன்றுவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி வேண்டும்.
மகசூல்!
                                                                                                                                                                      678
ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும்.
அதாவது, செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்துக்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும். நடவு நட்ட காலத்திலிருந்து 7-8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம்.
செலவுகள் (ரூ)
நிலம் உழுதல் : 2,500
உரம் : 15,000
கற்றாழை கன்று : 70,000
(ஒரு கன்று ரூ.7)
நடவுக் கூலி : 10,000
பராமரிப்பு : 20,000
அறுவடை கூலி : 10,000
இதர செலவுகள் : 10,000
மொத்த செலவுகள் : 1,37,500
விற்பனை வரவு!
செடிகளை அறுவடை செய்து அப்படியே விற்பனை செய்யும்பட்சத்தில் விற்பனை வருமானம் குறைவாகத்தான் கிடைக்கும். அதாவது, அறுவடை செய்த கற்றாழை செடிக்கு கிலோ ரூ.15 – ரூ.20 வரைதான் கிடைக்கும். அதே சமயத்தில் ஜெல் பிரித்து விற்பனை செய்கிறபோது, ஒரு கிலோ ஜெல்லுக்கு ரூ.75 – 100 வரை கிடைக்கும்.
ஜெல் எடுக்கத் திட்டமிடுகிறபோது 25% வரை கழிவு போகும். ஒரு கிலோ கற்றாழை ரூ.18 என சராசரியாக வைத்துக்கொண்டாலும் நமது உற்பத்தி 15 டன் என்கிறபோது, மொத்த விற்பனை வரவு ரூ.2,70,000. (15000
X 18=2,70,000) ஜெல் எடுத்து விற்பனை செய்வதற்கேற்ப ஒப்பந்தங்கள் செய்துகொள்கிறபோது விற்பனை வரவு கூடுதலாகும்.
லாபம்!
மொத்த விற்பனை : ரூ.2,70,000
மொத்த செலவு : ரூ. 1,37,500
லாபம் : ரூ.1,32,500
(இந்த வருமானம் 8 மாதங்களுக்கு. இதுவே கூடுதல் நிலம் வைத்து சுழற்சிமுறையில் செய்தால், ஒவ்வொரு மகசூலுக்கும் இந்த வருமானம் பார்க்க முடியும். இந்தத் தொழிலுக்கு மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் மூலம் மானியம் கிடைக்கும். தவிர விவசாயக் கூட்டுறவு சங்கம் மூலமாக மாநில அரசின் விவசாயக் கடன்கள் பெற முடியும்.

Monday, May 25, 2015

முருங்கையின் மருத்துவ மகத்துவம்


முருங்கையின் மருத்துவ மகத்துவம்

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.

முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.

இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்


முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது. புரதம் 6.7 சதவிதமும், கொழுப்பு 1.7 சதவிதமும், தாதுக்கள் 2.3 சதவிதமும் மற்றும் கார்போஹைட்ரேட்கள் 12.5 சதவிதமும் உள்ளது. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு  வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சீறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்புசளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்


அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். 

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். 

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும். 

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். 

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும். 

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும். 

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும். 

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும். 

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். 

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும். 

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும். 

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும். 

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும். 

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும். 

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும். 

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும். 

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும். 

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும். 

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும். 

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும். 

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். 

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். 

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். 

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும். 

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். 

சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும். 

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். 

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். 

தவசிக்கீரை- இருமலை போக்கும். 

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும். 

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும். 

கொடிகாசினிகீரை
- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும். 

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். 

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். 

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும். 

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

Sunday, May 3, 2015

கீரை சாகுபடி




கீரை சாகுபடி


keerai
  • கீரை சாகுபடியில் நிலத்தை தயார் செய்வதற்கு நல்ல கவனம் தர வேண்டும்.
  • நிலத்தை நன்கு உழுது கட்டிகள் இல்லாமல் செய்து அவைகளில் பாத்திகளை தயார் செய்து கொள்ளலாம்.
  • பாத்திகளின் அளவு நமது நிர்வாகத் திறமைக்கு ஏற்றபடி 8 சென்ட் முதல் 10 சென்ட் உள்ளபடி செய்து கொள்ளலாம்.
  • கீரை சாகுபடிக்கு அதிகம் தேவைப்படுவது நன்கு மக்கிய தொழு உரமாகும்.
  • இந்த எருவினை நன்கு மக்க வைப்பது இரண்டு காரணங்களுக்காக அவசியம் ஆகிறது.
  • எரு நன்கு மக்காமல் இருந்தால் அதில் களைச்செடிகளின் விதைகள் மடியாமல் இருந்து இதனை பாத்தியில் போடும்போது அதிக அளவில் களைச்செடிகள் முளைத்து விடும்.
  • எரு நன்கு மக்காமல் இருப்பின் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு உடனே கிடைக்காது.
  • மேலும் எரு நன்கு மக்கியிருக்கும்போது இதை இடும் இடத்தில் மண் இளக்கமாக இருக்கும்.அதோடு எரு இட்ட இடத்தில் வடிகால் வசதி நன்றாக இருக்கும்.
  • இயற்கை எருவினை சாகுபடி காலத்திற்கு முன்பாகவே சேகரித்து வைத்துக் கொண்டு அதன் மேல் சூரியஒளி படாமல் பாதுகாக்க வேண்டும்.
  • எருவினை சமயம் கிடைக்கும்போது கட்டி இல்லாமல் பொடி செய்து குவித்து வைத்து ஓலைகளைக் கொண்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதோடு வளமான செம்மண் மற்றும் மணல் இவைகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு பாத்தியில் சாகுபடி செய்யும் சமயம் இவைகளை எருவுடன் கலந்து இடலாம்.
  • வசதி கிடைக்கும்போது குளத்து வண்டல் மண்ணினை சேகரித்து இதனுடன் எருவினை நன்கு கலந்து சாகுபடி செய்யும் பாத்திகளுக்கு இடலாம்.
  • எருவினை பாத்தியில் போட்டால் மட்டும் போதாது.
  • அவைகளை சாகுபடி செய்யும் நிலங்களுக்கு இட்ட உடனே பாத்தியை நன்கு கொத்தி விட வேண்டும்.
  • அப்போது தான் எரு நன்கு மண்ணோடு கலந்து கீரை செடிகளை தளதளவென்று வளர வைக்கும்.
  • கீரை சாகுபடியில் முடிந்தவரையில் இயற்கை உர உதவியுடன் செய்வது நல்லது.
  • இருப்பினும் தொடர்ந்து ஒரே இடத்தில் கீரை சாகுபடி செய்து வருவதால் இயற்கை உரங்களோடு தேவையான அளவு ரசாயன உரங்களை இடலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் நிலத்திற்கு தேவையான இயற்கை எருக்களை தாங்களே தயார் செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே தங்கள் நிலத்தில் வேலை செய்வதால் வேலைக்கு கூலி ஆட்களை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
  • சாகுபடி செய்யும் கீரை முளைக்கீரையாக இருக்கலாம். சிறு கீரையாக இருக்கலாம். இவைகளின் வயது 24 நாட்களாக இருக்குமா என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
  • விதை விதைத்த 21,22,23,24 நாட்களில் கீரைச்செடிகளை வேரோடு பிடுங்கலாம்.
  • ஒரு நாளைக்கு 300 கட்டுகள் கீரை கிடைக்கும். எட்டு சென்ட் நிலத்தில் ஒரு கிலோ விதையை விதைக்கலாம்.
  • ஒரு கிலோ விதையின் விலை ரூ.1,000.
  • எட்டு சென்ட் பரப்பில் நான்கு அறுவடைகளில் ஒரு நாளைக்கு 300 கட்டுகள் வீதம் 1,200 முளைக்கீரை, அரைக்கீரை கட்டுகள் கிடைக்கும். ஒரு கட்டின் விலை ரூ.10.
  • கீரை சாகுபடியில் செய்பவர்களின் குடும்பமே நிலத்தில் பணி செய்கின்றது.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாத்திகளை அழகாகப் போட்டு மண்ணை மேடு பள்ளம் இல்லாமல் சமமாக செய்கிறார்கள்.
  • குடும்பத்தில் உள்ளவர்கள் நிலத்தில் பாடுபட்டு உழைத்து கீரை சாகுபடி செய்கின்றனர். அவர்களே கீரைகளின் வேர்களில் மண் ஒட்டாமல் தண்ணீரில் அலசி சுத்தம் செய்து கட்டுகளை நேர்த்தி செய்கிறார்கள்.
  • குடும்ப நபர்களே ஈடுபடுவதால் சாகுபடி செலவு அதிகம் இல்லை.
  • அறுவடையான கீரையை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. விற்பனை பிரச்னை எதுவும் இல்லை.
  • சாகுபடி நிலத்திலும், விவசாயி வீட்டிற்கும் நுகர்வோர்கள் வந்து கீரையை விலைக்கு வாங்கி செல்கிறார்கள்.
  • ஒரு விவசாயி மூன்று மாதங்கள் முளைக்கீரை, சிறு கீரை சாகுபடி செய்தால் கீரை விதை விலை ரூ.1,000 போக ரூ.20,000 நிச்சயமாக லாபம் எடுக்கலாம்.
  • கீரை சாகுபடி செய்பவர்கள் பாடுபட்டு உழைத்து ஊட்டச்சத்துக்கள் மிகுந்த கீரையை நமக்கு அளிக்கிறார்கள்.