Wednesday, March 2, 2016

’நான் முதல் தலைமுறை விவசாயி’

’நான் முதல் தலைமுறை விவசாயி’

நல்ல சம்பளம் தரும் ஐ.டி. துறை வேலைக்குப் பதிலாக விவசாயத்தில் ஈடுபாடு காட்டும் இளைஞர்களின் வரிசையில் ஒருவர்தான் என்றாலும், செந்தில்குமாரின் வாழ்க்கையும் இயற்கை வேளாண்மையை அவர் முன்னெடுக்கும் முறையும் வித்தியாசமானவை. நமது மரபு விவசாய முறைகள் குறித்த செந்தில்குமாரின் தேடல், வேர்களை நோக்கி அவரைத் திருப்பியது. ஒரு விவசாயியாக இன்று அவர் பரிணமித்திருக்கிறார்.
நம்முடைய மரபு சாகுபடி முறைகளை மீட்டெடுப்பதிலும், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேலையையும் அவர் செய்துவருகிறார். வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குச் சென்றபோது செந்தில்குமாருக்கு ஏற்பட்ட அனுபவமே, நம்முடைய மரபு சாகுபடி முறைகள் மீது அவரை கவனம் செலுத்தத் தூண்டியது.
வெளிநாடு தந்த விழிப்பு
“நான் வேலை பார்த்த சாஃப்ட்வேர் கம்பெனி சார்பாக அமெரிக்கா சென்றேன். அங்கே தமிழர்கள் குறித்தும் நம் வாழ்க்கைமுறை குறித்தும் அவர்கள் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் என்னை வியக்கவைத்தது. நம் உழவுக் கலாச்சாரத்தையும் தற்காப்புக் கலைகளையும் அவர்கள் பெரிதாக மதிக்கின்றனர். ஆனால், நம்மிடமோ அது பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லை.
நம் மண்ணில் விளைகிற பொருட்களை மட்டமாகவும் தரக்குறைவாகவும் நினைத்து ஒதுக்கிவிட்டு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறோம். வெளிநாட்டில் ஒருவர் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே, அதன் மகத்துவத்தைப் பற்றி சொன்னபோது, அத்தனை நாட்களாக வாழைப்பழத்தை அலட்சியமாக நினைத்த எனக்கு அவமானமாக இருந்தது” என்று சொல்லும் செந்தில்குமார், சென்னை திரும்பியதும் நம் மரபு வேளாண்மை குறித்த தேடலில் இறங்கினார்.
பட்டறிவும் களப்பணியும்
வேளாண் வல்லுநர் சுபாஷ்பாலேக்கரின் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண்மை’, செந்திலின் தேடலுக்குப் பாதை அமைத்தது. அவர் நடத்திய வேளாண் கருத்தரங்குகளில் பங்கேற்று தன் பார்வையை விரிவுபடுத்திக்கொண்டார். களப்பணி இல்லாத பட்டறிவு, வேளாண்மையைப் புரிந்துகொள்ள உதவாது என்பதால் தும்கூர், மைசூர் ஆகிய இடங்களுக்குச் சென்று விவசாய முறைகளைத் தெரிந்துகொண்டார்.
ஒவ்வொரு நாட்டிலும் எப்படியெல்லாம் இயற்கை முறையில் விவசாயம் செய்யப்படுகிறது என்பதை, அந்தந்த நாட்டு வேளாண் அறிஞர்கள் மூலமாகத் தெரிந்துகொண்டார். பனிபடர்ந்த அண்டார்ட்டிகா கண்டத்திலேயே விவசாயம் நடைபெறும்போது, வேளாண் மற்றும் தரிசு நிலங்களைப் பெருமளவு கொண்ட இந்தியாவில் ஏன் அது சாத்தியமாகாது என்ற கேள்வி, செந்திலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.
விவசாயிகளே வல்லுநர்கள்!
அடுத்ததாக இயற்கை வேளாண் முன்னோடி நம்மாழ்வார் நடத்திய பயிற்சி முகாம்களில் பங்கேற்றது, வேளாண்மை செய்வதற்கான செந்திலின் தன்னம்பிக்கையை அதிகரித்தது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவருகிறவர்களைச் சந்தித்து, அவர்களுடைய விவசாய முறைகளைக் கற்றறிந்தார். அப்போது, எழுதப் படிக்கத் தெரியாத நம் விவசாயிகளுக்குக் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட வேளாண் கலைகள் தெரிந்திருப்பது செந்திலின் ஆச்சரியத்தை அதிகப்படுத்தியது.
“ஏர் உழ ஏற்ற நாளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, ஒரு பருவத்தின் காலநிலை, மழை பொழியும் அளவு, மண் வளம், மண்ணுக்கேற்ற இயற்கை உரங்கள், நுண்ணுயிர்களின் செயல்பாடு, நிலப் பாகுபாடு, கால்நடை பராமரிப்பு, பயிர்ப் பாதுகாப்பு என்று வேளாண்மையோடு தொடர்புடைய அனைத்தும் விவசாயிகளுக்கு அத்துப்படியாக இருந்தது, அவர்கள் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது” என்று சொல்லும் செந்தில்குமார், விவசாயத்துக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் செயல்களில் இறங்கினார்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் விவசாயிகள் பண்படுத்தி வைத்திருந்த நிலத்தை, ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் வளமற்றதாகி மாற்றிவருகின்றன. நிலமும் நிலம் சார்ந்த வாழ்க்கையுமாக இருந்த நம் ஐந்திணைக் கோட்பாடு காலப்போக்கில் மடிந்து, எதை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் என்று மாறிவிட்டது. மண்ணுக்கேற்ற பயிர்கள், கால்நடைகள் என்று இயற்கையோடு ஒன்றிவாழ்கிற வாழ்வே சிறந்தது” என்று நம் விவசாய முறையின் பெருமையைப் பகிர்ந்துகொள்கிறார் செந்தில்.
தற்சார்பு விவசாயம் 
பெருமைகளைப் பகிர்ந்துகொள்வதுடன் செந்தில்குமார் நின்றுவிடவில்லை. வேலூர் மாவட்டம் அத்தித்தாங்கலை அடுத்த ஒழலை கிராமத்தில், ஐந்து ஏக்கர் பரப்பளவில் வெற்றிகரமாக விவசாயம் செய்துவருகிறார். நிலத்தை வாங்கி நான்கே ஆண்டுகளில், ஆச்சரியப்படத் தக்க உற்பத்தியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். முதலில் அந்த நிலத்தில் படிந்திருக்கும் ரசாயனத்தை அகற்றி, பண்பட்ட நிலமாக மாற்றினார். விவசாயத்துக்கு ஊட்டமளிக்க உள்நாட்டு கால்நடைகள்தான் தேவை என்பதால் உம்பளச்சேரி, திருவண்ணாமலை குட்டை ரக மாடுகளை வளர்த்துவருகிறார்.
இங்கே சூரிய அட்டவணைப்படி விவசாயம் நடக்கிறது. நீர்ப்பிடிப்புக்காகப் பண்ணைக் குட்டைகள் அமைத்திருக்கிறார்கள். சுபாஷ் பாலேக்கரின் ஐந்தடுக்கு விவசாயம் இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது. மரங்கள், தானியப் பயிர்கள், மூலிகைச் செடிகள் என இங்கே பல பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பஞ்சக் கவ்யா, பழ உரம், மீன் உரம், திரவ உரம், சாம்பல் உரம் எனப் பல்வேறு வகையான உரங்களும் இங்கே தயாரிக்கப்படுகின்றன. பச்சிலை பூச்சி விரட்டி, சாம்பல் – மூலிகை பூச்சி விரட்டி, இஞ்சி – பூண்டுக் கலவை பூச்சி விரட்டி, உலர் மூலிகைப் பூச்சி விரட்டி போன்றவையும் இங்கேயே தயாரிக்கப்படுகின்றன.
Courtesy: Hindu
Courtesy: Hindu
உழைப்பும் முக்கியம்
“நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த விவசாய நிலத்தை வாங்கினேன். நிலத்தில் இறங்
கிப் பாடுபட்டால், அதற்கு நிச்சயம் பலன் உண்டு என்பதற்கு, இந்த நிலமே சாட்சி. ஐ.டி. கம்பெனியில் இருந்துகொண்டு விவசாய வேலை பார்ப்பதை ஆரம்பத்தில் எதிர்மறையாகப் பேசியவர்களும்கூட, பாரம்பரிய விவசாயத்தின் அவசியத்தை இன்றைக்குப் புரிந்துகொண்டிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் முதல் தலைமுறை விவசாயி என்பதில் பெருமிதமடைகிறேன்” என்று சொல்லும் செந்தில்குமார், அதேநேரம் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உணர்ச்சிவசப்பட்டு வேலையை விடுவது நல்லதல்ல என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
“விவசாயம் செய்ய வேண்டும் என்றால், நிலத்தில் இறங்கிப் பாடுபடத் தயாராக இருக்க வேண்டும். எடுத்ததுமே பலன் கிடைத்துவிடாது. பொறுமையும் கடின உழைப்பும் அவசியம். இன்று மக்களிடம் ஆர்கானிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருக்கிறது. ஆனால், இதிலும் கலப்படம் வந்துவிட்டதைப் பார்க்க முடிகிறது. விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்தால், கலப்படத்தைத் தவிர்க்கலாம்” என்கிறார்.
ஒரே நாளில் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது. ஆனால் மாற்றத்துக்கான விதையை ஊன்றுவதற்கு ஒரு நாள் போதும். நீங்கள் விதை ஊன்றத் தயாரா?
கான்கிரீட் காடுகள் சூழ்ந்த பெருநகரங்களில் நகர்ப்புற விவசாயத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் தன் நண்பர்களுடன் இணைந்து ‘சென்னை கிரீன் கம்யூன்’என்ற அமைப்பை 2008-ல் செந்தில்குமார் தொடங்கினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும், நம் மரபு உணவுப் பொருட்களான சிறுதானியங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். இயற்கை விவசாயம் மூலம் அமைக்கப்படுகிற தோட்டங்கள் குறித்தும் அவற்றில் விளையும் காய்கறிகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் இவர்களுடைய செயல்பாடு குறிப்பிடத்தக்கது. வீடுகளிலும் மாடிகளிலும் தோட்டம் அமைக்க விரும்புகிறவர்களுக்கு இக்குழு வழிகாட்டுகிறது.
தனியார் மற்றும் பொது இடங்களில் இயற்கை வேளாண்மை குறித்த பயிலரங்குகளை இலவசமாக நடத்துகின்றனர். பெரிய அளவிலான கூட்டங்களுக்குக் குறைந்த கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களுடைய அமைப்பு சென்னை மட்டுமல்லாமல் மைசூர், ஓசூர், கேரளா என்று பல்வேறு இடங்களிலும் கிளை விரித்திருக்கிறது. சென்னை கிரீன் கம்யூன் மூலம் கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இயற்கை வேளாண்மையிலும் மாடித் தோட்டம் அமைக்கும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.
விதைகளைக் காப்போம்
அவருடைய பணி அத்துடன் முடிந்துவிடவில்லை. வேளாண்மையின் ஆதாரமே தரமான விதைகள்தான். வீட்டையே விற்கிற வறுமையிலும் விதைநெல்லை விற்காத விவசாயிகளைக் கொண்ட சமூகம் நம்முடையது. நம் பாரம்பரிய வேளாண்மை முறைகளை மீட்டு, அதைப் பரவலாக்கி, பாதுகாக்கும் நோக்கத்துடன் ‘தமிழர் மரபியல் நிறுவனம்’ என்ற அமைப்பையும் செந்தில்குமார் நடத்திவருகிறார். தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படும் இந்த அமைப்பு மூலம், பள்ளி மாணவர்களுக்கு விதை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறது.
“நம் பாரம்பரிய விதைகளை மாணவர்களிடம் கொண்டுசேர்க்கும் எங்கள் நோக்கம், தடங்கல் இல்லாமல் நடந்துவருகிறது.  தங்கள் கையால் பயிரிட்டு, விளைகிற காய்கறிகளை ஆர்வத்துடன் அறுவடை செய்கிற மாணவர்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கையை நம் மனதில் அதிகரிக்கிறார்கள்” என்று பெருமிதம் பொங்கச் சொல்கிறார் செந்தில்குமார்.
செந்தில்குமார் தொடர்புக்கு: 09940028160
நன்றி: ஹிந்து 

1 comment:

  1. When it comes to Mahindra Scorpio Pickup spare parts, Mahindra Parts India is your go-to destination. With an extensive range of genuine Mahindra spare parts specifically designed for Scorpio Pickup models, they ensure that your vehicle performs at its best. Whether you need replacement parts for the engine, transmission, suspension, or any other component, Mahindra Parts India offers high-quality and reliable options. Their commitment to authenticity and durability guarantees that you get the perfect fit and optimal performance for your Mahindra Scorpio Pickup. With Mahindra Parts India, you can trust that your vehicle will be equipped with the best spare parts available in the market, ensuring a smooth and efficient driving experience.

    ReplyDelete