Tuesday, September 20, 2016

அசோலா‘ ஓர் அமுதசுரபி!

அசோலா‘ ஓர் அமுதசுரபி!



“ஊர்ல சொல்வாங்களே... 'சுண்டைக்காய் கால்பணம், சுமை கூலி முக்காப்பணம்'னு... அதுமாதிரிதான் நேத்துவரை எங்க பொழப்பு இருந்துச்சி. பால் கறந்து வித்தா கிடைக்கற காசுல பாதி காசு தீவனம் வாங்கறதுக்கே காணாம போயிட்டி ருந்திச்சி. கையில கால் காசு தங்கல. ஆனா, இன்னிக்கு நிலமையே வேற... இந்த 'அசோலா'வை வளர்த்து மாடுகளுக்குக் கொடுத்த பின்னாடி தீவன செலவு பாதியா கொறைஞ்சி போச்சி.. அதோட பாலும் கூடுதலா கறக்குது. இப்பதான் நாலு காசு கையில நிக்கிது”
-திண்டுக்கல் அருகே கண்ணாபட்டியைச் சேர்ந்த முருகேசன் என்கிற விவசாயியின் அனுபவம் இது.
இவரைப்போலவே பல விவசாயிகளின் வாழ்க்கையில் அற்புத மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது அசோலா என்ற பாசிவகைத் தாவரம். 

ஐம்பது செங்கல், சின்னதாக ஒரு தார்பாலின் ஷீட், இரண்டு சட்டி மாட்டுச் சாணம், பத்துக் குடம் தண்ணீர், கால் கிலோ அசோலா இது இருந்தால் போதும்... நீங்களும் அசோலா வளர்க்க ஆரம்பித்துவிடலாம். இவற்றை வாங்குவதற்கு வெறும் இருநூறு ரூபாய்தான் செலவு... மூன்றே நாட்களில் இருமடங்கு, அடுத்தடுத்த நாட்களில் பலமடங்கு என்று பெருகிக்கொண்டே இருக்கும் அசோலாவினால் கிடைக்கும் பலனோ... பல ஆயிரம் ரூபாய் மதிப்புடையது.
மாட்டுக்கு மட்டுமல்லாமல் அனைத்து கால்நடை களுக்கும் தீவனமாக பயன்படுவதுடன், நெல் வயலில் உரச்செலவை குறைத்து, களையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்த அசோலாவுக்கு இருப்பதால், விவசா யிகளைப் பொறுத்தவரை இது ஓர் அமுதசுரபி!
''என்கிட்ட ஆறு கறவை மாடு இருக்கு. பால் மூலமா வர்ற வருமானத்தை வெச்சிதான் குடும்பத்தை ஓட்டிட்டிருக்கேன். தவுடு, புண்ணாக்கு எல்லாம் கலந்து வெச்சாதான் பால் அதிகமா குடுக்கும். ஒரு லிட்டர் பால் வித்தா, பத்து ரூவா கிடைக்கும். இதுல தீவன செலவுக்கே அஞ்சு ரூவா போயிருது. ஒரு நாளைக்கு புண்ணாக்கை போடாட்டி பாலோட அளவு குறைஞ்சிரும். இப்படி தீவன செலவு போக மிச்சமிருந்ததை வெச்சிதான் பொழப்பை ஓட்டிட்டிருந்தேன். இந்த நிலைமையிலதான் என்.ஜி.ஓ. அமைப்பைச் சேர்ந்தவங்க அசோலாவைப் பத்திச் சொன்னதோட பயிற்சியும் கொடுத்தாங்க.
அம்பது சதுரடி தொட்டியில கால் கிலோ அசோலாவைதான் போட்டேன். இப்ப தெனமும் ஒரு கிலோ அசோலா எடுத்து மாடுகளுக்கு தீவனமா குடுக்கிறேன். தவிடு, புண்ணாக்கோட அளவைப் பாதியா கொறைச்சிட்டேன். சராசரியா ஆறு லிட்டர் பால் கொடுத்துக்கிட்டிருந்த மாடுங்க, இப்ப ஏழு லிட்டர் வரைக்கும் கொடுக்குது. பாலும் அதிக கொழுப்புச் சத்தோட இருக்கு.

முன்னல்லாம் தீவன செலவு பதினைஞ்சி ரூபாய் வரைக்கும் ஆகும். ஆனா, அசோலாவை கிலோ அறுபது பைசா செலவுல நானே உற்பத்தி செய்றதால செலவு ரொம்ப குறைஞ்சிருக்கு. பாலும் கூடுதலா கெடைக்குது. இதெல்லாம் அசோலா எனக்குக் கொடுத்த போனஸ்'' என்று தெம்பாகச் சிரிக்கும் முருகேசன்,
''என்னை பாத்துட்டு இப்ப பலரும் அசோலா உற்பத்தி பண்றாங்க. எங்க ஏரியாவுல இப்ப அசோலாவோட ஆட்சிதான் நடக்குது” என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னார்.
அசோலாவை தமிழக விவசாயிகளிடத்தில் அறிமுகம் செய்ததில் கன்னியாகுமரியில் உள்ள 'விவேகானந்தா கேந்திர'த்துக்கு முக்கிய இடம் உண்டு. இங்கே இயற்கை வள அபிவிருத்தித் திட்டம் என தனி அமைப்பே செயல்பட்டு வருகிறது. அதன் ஆராய்ச்சி உதவியாளர் பிரேமலதா, (தொலைபேசி: 04652 -246296) மலையாள வாசனையுடன் அசோலவைப் பற்றி விவரித்தார்.
''பாசி குடும்பத்தைச் சேர்ந்த மிதக்கும் தாவரம்தான் இந்த அசோலா. இதன் தண்டு, வேர் பகுதிகள் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கும். இலைகள் நீரின் மேல்பரப்பில் இருக்கும். பெரும்பாலும் பச்சை அல்லது லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். கால்நடை தீவனமாகப் பயன்படுவது போலவே தாவரங்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது. அசோலாவின் இலைப்பகுதியின் உள்ளே நீலப்பச்சைப் பாசி இருக்கிறது. காற்று மண்டலத்திலுள்ள தழைச்சத்தை கிரகித்து தாவரங்களுக்கு கொடுக்கும் வேலையை இது செய்கிறது. இந்த நீலப்பச்சை பாசியின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை நீரிலிருந்து அசோலா எடுத்துத் தருகிறது. அசோலாவின் விதைப்பருவத்திலிருந்து அதனுள் இந்த நீலப்பச்சை பாசியும் சேர்ந்தே வளர்கிறது. இந்தச் சிறப்பு வேறு எந்தத் தாவரத் துக்கும் இல்லை” என்று வியப்பூட்டும் தகவல்களை எடுத்து வைத்தவர், அசோலா வளர்ப்பு முறைகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
''வளர்ப்புச் செலவைக் குறைக்கும் வகையில் செயற்கை நீர்தொட்டியை அறிமுகப்படுத்தி யிருக்கிறோம். மரநிழலில் ரெண்டு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்துக்கு செங்கல்லை வரிசையா அடுக்கினால் தொட்டிபோன்ற அமைப்பு உருவாகும். அதனுள் பழைய பிளாஸ்டிக் சாக்குகளை விரித்து, அதன் மீது தார்பாலின் ஷீட்டை விரிக்கவேண்டும். அதன் மீது 15 கிலோ அளவுக்கு வளமான மண்ணைப் பரப்பிவிடவேண்டும். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ பசும்சாணியையும், இருபது கிராம் ராக்பாஸ்பேட் (கல்மாவு) அல்லது சூப்பர் பாஸ்பேட்டை கரைத்துவிட வேண்டும். தொட்டியின் உள்பகுதியில் பத்து செ.மீ. உயரத்துக்கு தண்ணீர் இருந்தால் போதும். அதில் 500 கிராம் அசோலாவை போடவேண்டும். பத்து பதினைந்து நாட்களில் தினமும் அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை அசோலா அறுவடை செய்யலாம்.
சூப்பர் பாஸ்பேட் பத்து கிராம், சாணம் 500 கிராம் இவற்றை ஐந்து நாட்களுக்கொரு முறைக் கரைத்து அந்தத் தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தால் அசோலாவின் வளர்ச்சி ஒரே சீராக இருக்கும். உற்பத்திச் செலவு கிலோவுக்கு 65 பைசாதான்.
வெப்பநிலை 25 முதல் 31 டிகிரி வரை இருக்கும்போது அசோலாவின் வளர்ச்சி நன்றாக இருக்கும். வெப்பநிலை அதிகமாகும் போது, வளர்ச்சி குறைந்து நிறமும் பழுப்பாக மாறிவிடும். தினமும் கையினாலோ... குச்சியாலோ தொட்டி யைக் கிளறிவிட்டு, அசோலாவை அறுவடை செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இட நெருக்கடி இல்லாமல் அவை நன்றாக வளரும்” என்றவர், அடுத்து அதன் பயன்பாடுகள் பற்றி விவரித்தார்.
''அசோலா எல்லாச் சத்துக்களும் உள்ள ஒரு தீவனமாகும். குறைந்த அளவு லிக்னின் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் இதை கால்நடைகள் மட்டுமல்லாமல் கோழி, மீன், பன்றி ஆகியவற்றுக்கும் உணவாக கொடுக்கலாம். அறுவடை செய்த அசோலாவில் மாட்டுச் சாண வாடை இருக்கும். அதனால் நன்றாக கழுவிதான் கால்நடைகளுக்குக் கொடுக்கவேண்டும். தவிடு அல்லது மாட்டு தீவனத்துடன் சரிபாதியாகக் கலந்து கொடுக்கலாம். ஒரு மாட்டுக்கு ரெண்டு கிலோ அளவில் தீவனமாக கொடுக்கும்போது 20% வரை பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரம், மாட்டின் உடல் ஆரோக்கியம், வாழ்நாள் ஆகியவை அதிகரிக்கிறது. புண்ணாக்கு போன்ற தீவனத்தின் பயன்பாட்டை 40% வரை குறைக்கிறது.
கோழிகளுக்கு அசோலாவை நேரடியாக கொடுக்கும் போது முட்டையின் தரம் கூடுவதுடன் எண்ணிக் கையும் அதிகரிக்கிறது. அசோலா சாப்பிடும் கோழி களை பெரும்பாலும் நோய் தாக்குவதில்லை. ஆடு களுக்கு கொடுக்கும்போது ஆரோக்கியம் அதிகரிப் பதுடன் பாலின் அளவு கூடுகிறது. அசோலாவை உணவு உப்புடன் சேர்த்து பன்றிகளுக்கு கொடுத்தால் எடை அதிகரிப்பதுடன் இறைச்சியின் தன்மையும் நன்றாக இருக்கும். பெரிய தொட்டிகளில் வியாபார ரீதியாக மீன் வளர்ப்பவர்கள், அசோலாவை உணவாகக் கொடுத்தால் அதிக எடையிலான மீன்கள் விரைவாகவே கிடைக்கும். முயலுக்கும் கூட அசோலாவைக் கொடுக்கலாம். இதன் பயன்ப £ட்டை சொல்லிக்கொண்டே போகலாம்'' என்று பெருமிதமாகச் சொன்னவர், ''அசோலா வளர்ப்பு சம்பந்தமான பயிற்சியை மாதம் இரண்டு தடவை கன்னியாகுமரியிலிருக்கும் எங்கள் கேந்திராவில சொல்லிக்கொடுக்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.400. தங்குமிடம், உணவு மற்றும் அசோலா வளர்ப்புக்கான பாலிதீன் ஷீட்கள் ஆகியவையும், விதைப்புக்குத் தேவைப்படும் அசோலாவையும் இலவசமாக கொடுப்போம்” என்று சொன்னார்.
ஆடு, மாடுகளுக்கு மட்டுமன்றி பயிருக்கும் பயன் தருவதாக வந்திருக்கும் அசோலா... உண்மையிலேயே அமுதசுரபிதான்!

கொசு விரட்டும் அசோலா! 

அசோலாவில் அதிகளவு புரதச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி-12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம், ஆகியவை அடங்கி யுள்ளன. அசோலாவில் நீர்ச்சத்து 90-92%, புரோட்டீன் 25-30%, அமினோ அமிலங்கள் 10-15% என்ற அளவில் உள்ளன. மிகக் குறைந்தளவு எண்ணெய் சத்தும், கார்போ-ஹைட்ரேட்டும் உள்ளன.
ஏழைகளின் 'ஸ்பைருலினா' என அழைக்கப்படும் அசோலாவை மனிதர்களும் சாப்பிடலாம். அசோலாவை நன்றாக கழுவி பாலில் போட்டு கொதிக்கவைத்து சாப்பிடலாம். வடை, போண்டா வகைகளில் கீரைக்குப் பதிலாக அசோலாவை பயன்படுத்தலாம். கொழுப்பே இல்லை... முழுக்க புரதமே நிறைந்திருக்கிறது என்பதால் எந்த பயமும் இல்லை.
அசோலா வளர்க்கும் இடத்தில் கொசு வராது என்பதால், கொசுத் தொல்லை இருப்பவர்களும் இதை வளர்க்கலாம்.

நெல் நடவு செய்த ஒரு வாரத்தில ஒரு ஏக்கர் நிலத்தில் 200 கிலோ அசோலாவை போடவேண்டும். அது 25 நாட்களில் நன்றாக வளர்ந்து நிலம் முழுவதும் பரவிவிடும். இது நுண்ணுயிர் உரம் என்பதால் 30% உரச்செலவு குறையும். தண்ணீர் ஆவியாவது தடுக்கப் படும். களைகள் கட்டுப்படும். மகசூலும் கூடும்.

செலவு சின்ன மீன்... வரவு பெரிய மீன்!

செலவு சின்ன மீன்... வரவு பெரிய மீன்!


ப சியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக்கற்றுக்கொடு’ என்பார்கள். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக களத்தில் குதித்திருக்கிறார்
அகமது மொகைதீன். மீன்பண்ணை அமைத்து, தனிமனிதன் தன் பொருளா தார வளத்தை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதற்கு உதாரணமாக இருப்பதோடு, அதையே பிறருக்குச் சொல்லித் தரும் வேலையையும் செய்து வருகிறார்.
மதுரை, ஒத்தக்கடை அருகே அரும்பனூரில் 'ஏ.எம்.அக்வா ஃபார்ம்' என்ற பெயரில் மீன் பண்ணை நடத்தி வரும் மொகைதீன், '‘சில ஆயிரங்களும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் போதும். மீன்கள் வளர்த்து மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்'' என்று இளைஞர்களுக்கு அழைப்பு வைக்கிறார்.
பத்து ஏக்கர் பரப்பளவிலான தோட்டம்... அதில் ஆறு ஏக்கரில் நிமிர்ந்து நிற்கிறது தென்னந்தோப்பு. மீதமுள்ள பகுதியில் நெல், வாழை என விவசாயம் விரிந்து கிடக்க... தென்னை மரங்களுக்கு இடையில் நீள, நீளமான குழிகளில் தண்ணீர் அலையடிக்கிறது. அதுதான் அவரின் மீன் பண்ணை.

பொருளாதாரப் படிப்பை முடித்த கையோடு சவுதி அரேபியாவுக்குப் பறந்தவர், அங்கே வேலை அவ்வளவு சிறப்பானதாக இல்லாது போகவே, ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார். வந்த வேகத்தில் பூர்வீக நிலத்தில் விவசாயத்தை ஆரம்பித்தவர்... படிப்படியாக முன்னேறி, இன்றைக்கு மீன்பண்ணை வரை வந்திருக்கிறார்.
மேற்கொண்டு அவரே சொல்கிறார் கேட்போம்...
''எங்க கிணத்துல தண்ணி எப்பவுமே வத்தாது. அதை வெச்சித்தான் மீன் பண்ணை போடலாம்னு முடிவு பண்ணினேன். பல இடங்களுக்கும் போய் மீன் பண்ணைகளைப் பாத்து விஷயங்களை தெரிஞ்சிகிட்டு, எனக்கு ஏத்த மாதிரி இந்தப் பண்ணையை அமைச்சேன். சிமென்ட் தொட்டி களைக் கட்டினா அதிகமா செலவாகும். அதனால தென்னை மரங்களுக்கு இடையில குழிகளை வெட்டி அதில் தண்ணியை விட்டு மீன் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பிச்சேன். என்னோட முயற்சி வெற்றிகரமா அமைஞ்சி போச்சி.
தரமான மீன் குஞ்சுகள் கிடைக்கறதுல சிக்கல் இருந்திச்சி. நானே தரமான குஞ்சுகளை தேடிப்பிடிச்சி வாங்கி வந்ததோட, அதை என்னோட பண்ணையிலயும் உற்பத்தி பண்ணி விக்க ஆரம்பிச்சிட்டேன். பொறிச்சி மூணே நாள் ஆன குஞ்சுகளை பவானிசாகர், கொல்கத்தாவுல இருந்தெல்லாம் வாங்கி, ரெண்டு மாசம் வரை என்னோட பண்ணையில வளர்க்கிறேன். அதுக்குப் பிறகு மற்ற பண்ணைகளுக்கு விக்கிறேன்.
குளத்து மீன் வகைகளைப் பொறுத்தவரை கட்லா, ரோகு, கண்ணாடி கெண்டை, சில்வர் கெண்டை, பொட்லா, மிர்கால், வாளை, நாட்டு விரால், புல் கெண்டை மாதிரியான ரக குஞ்சுகளை உற்பத்தி செய்றேன். லட்சக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி பண்ணினாலும், எல்லாம் வித்துருது. கவர்மென்ட் ஆர்டர், தனியார் ஆர்டர்னு தொடர்ந்து வாங்கிக்கிட்டே இருக்காங்க. திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள்ல அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் குளத்துல மீன் வளக்கறாங்க. அதுக்கும் நான்தான் மீன் குஞ்சுகள கொடுக்கறேன். தென்மாவட்டத்தைப் பொறுத்தவரை குளத்து மீன் வளக்கற ரொம்ப பேரு எங்கிட்ட வாங்குறாங்க. மீன் குஞ்சு ஒண்ணுக்கு இருபது பைசாவில் இருந்து எண்பது பைசா வரைக்கும் ரகத்துக்கு ஏத்தா மாதிரி விலை இருக்கும்.
தண்ணீர் ரொம்ப குறைவா கிடைக்கற காலத்துல தென்னைக்கு இடையே சிமென்ட் சிலாப்களை வெச்சி, அதுல வண்ண வண்ண மீன்களை வளக்கறேன். அதுக்கான சந்தை வாய்ப்பும் நல்லா இருக்கு'' என்று கொஞ்சம் நிறுத்தினார் மொகைதீன்.
மீன் வளர்ப்பில் இவருடைய கொடி வெகுவாக பறக்கவே, 'தமிழ்நாடு மீன் வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க’த்தின் தென்மாவட்ட அமைப்பாளர் என்ற பதவி வந்து சேர்ந்திருக்கிறது. அத்துடன், மீன் பண்ணையையும் சிறப்பாக நடத்துவதால், அரசுத் தரப்பலிருந்து நடத்தப்படும் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்பட்டு பலருக்கும் பயிற்சி கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறார் மொகைதீன்.
சரி, மீன் வளர்ப்பு எல்லோருக்கும் சாத்தியமா... அதைப் பற்றி என்ன சொல்கிறார் மொகைதீன்?
“பொதுவா இருபது ஏக்கர் நிலத்தில விவசாயம் செஞ்சு கிடைக்கிற லாபத்தை, ஒரு ஏக்கர்ல மீன் வளர்த்தாலே எடுத்துறலாம். அதனாலயே இப்ப விவசாயிகள் பலரும் மீன் வளர்ப்புல அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. முப்பதாயிரம் ரூபாய் பணம், அரை ஏக்கர் இடம், தண்ணி இது மூணும் இருந்தா போதும்... யார் வேணும்னாலும் மீன் வளர்ப்பை ஆரம்பிச்சிடலாம். வர்ற வருமானத்தைப் பொறுத்து மீன் வளர்ப்பையும் விரிவு படுத்திக்கலாம். தென்னை விவசாயம் மட்டும் செய்றவங்களுக்கு வரப்பிரசாதமான தொழில் இது. ஊடு பயிர் போடறதுக்குப் பதிலா தென்னை மரங்களுக்கு நடுவுலயே குழி எடுத்து மீனை வளக்கலாம்.
அதிக செலவாகும்னு நெனச்சுகிட்டுதான் ரொம்ப பேரு இந்தத் துறைக்கு வரத் தயங்குறாங்க. உண்மையில சொல்லப்போனா... செலவு ரொம்ப கம்மி, வருமானம் ஜாஸ்தி. இதை அனுபவத்துல உணர்ந்தவன் நான். மீனை வளர்த்து எங்க விக்கறதுனு ஒரு கேள்வி வரும். நீங்க எங்கயும் அலைய வேணாம். மீன் இருக்குதுனு தெரிஞ்சா வியாபாரிகளே தன்னால வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. மீன்வளத்துறையில இருந்தும் உதவிகள் கிடைக்கும். நம்ம நாட்டுத் தேவையில பத்தில ஒரு பங்குகூட நாம் இன்னும் உற்பத்தி செய்யல. மீன் உணவின் தேவை ரொம்ப அதிகம். அதனால விற்பனை ஒரு பிரச்னையே இல்லை'' என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் பேசி முடித்த மொகைதீன்,
''மீன் வளர்ப்பு சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் நேரிலோ போன்லயோ என்கிட்ட கேட்கலாம். எப்பவும் ஆலோசனைகள் சொல்லத் தயாரா இருக்கேன். பயிற்சிக்காக என்கிட்ட வந்தா இலவசமாகவே சொல்லித் தரவும் தயார்'' என்றார்.
தொடர்பு முகவரி: அகமது மொகைதீன், அரும்பனூர் (அஞ்சல்), வேளாண்மை கல்லூரி (வழி) மதுரை-625104, போன்: 98431-70706, 0452- 3293426.
வரவு எப்படி?
மீன் வளர்ப்பின் வருவாய் எப்படி என்பதை கெண்டை மீனை உதாரணமாக எடுத்துக் கொண்டு சொல்கிறார் மொகைதீன்:
அரை ஏக்கரில் மீன் வளர்ப்பதாக வைத்துக் கொள் வோம். ஒரு மீன் குஞ்சு அம்பது பைசா வீதம் இருபதாயிரம் குஞ்சுகள் வாங்கவேண்டும். அதன் விலை பத்தாயிரம் ரூபாய். அதில் இருபது முதல் ஐம்பது சதவிகித குஞ்சுகள் தேறிவிடும். இருபது சதவிகிதம் தேறுகிறது என்று எடுத்துக்கொண்டலே... நான்காயிரம் மீன்கள் கிடைக்கும். ஆறு மாதம் வளர்ந்த நிலையில் ஒரு மீன் சராசரியாக ஒரு கிலோ எடை இருக்கும். மொத்தம் நான்கு டன் மீன்கள் கிடைக்கும். ஒரு கிலோ மீன் குறைந்தபட்சம் முப்பது ரூபாய் போகும் என்று வைத்துக்கொண்டால்... 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக... கையில் 80 ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும். மாதத்துக்கு சராசரி யாக 13 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

குழிகளை அமைப்பது எப்படி?
தென்னை மரங்களுக்கு நடுவே நூத்தி இருபதடி நீளம், பத்தடி அகலம், அஞ்சடி ஆழம் இதுதான் ஒரு குழிக்கான கணக்கு. மீன் குஞ்சு வளர்ப்பு மட்டும் செய்ய நினைப்பவர்கள் மூணு அடி ஆழம் வைத்துக்கொண்டால் போதும். குழியில் கரம்பை மண்ணைக் கொட்டி, தண்ணீர் விட்டு மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். சரியான மண் கிடைக்கவில்லை என்றால் குழிக்குள் பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதில் தண்ணீரை விட்டும் வளர்க்கலாம்.
கிராமத்து விவசாயிகளுக்கு சுலபமாக கிடைக்கும் மாட்டுச் சாணம், தவிடு, கொஞ்சம் புண்ணாக்கு, கருவாட்டு தூள் இதெல்லாம் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்.

Very useful site with lots of Information related to agriculture

வெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்

வெட்டிவேர்: ஒரு வாசனைமிக்க விவசாயம்



வெட்டிவேர்
வெட்டிவேர்
தமிழ்நாட்டில் நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத் தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள்.
இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி என்று வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர் செய்வது என்று பார்ப்போம்.
இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல் பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயி ரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும், வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக் கொள்ள தயாராக உள்ளார்கள். செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரைமட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம்.
மேலே உள்ள பச்சை இலைகள் மாட்டுத்தீவனம். பன்னிரெண்டு மாதங்களில் இருந்து பதினான்கு மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு பன்னிரண்டாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிடவேண்டியதுதான்.
முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்த முறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். ரசாயன உரம் தேவையில்லை. பூச்சி மருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது.
பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ அல்லது வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சி விரட்டியாகவும் செயல்படும். வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.
நாங்கள் எங்கள் நிலத்தில் போன வருடம் ஒரு ஏக்கரில் சோதனை முறையில் வெட்டிவேர் பயிரிட்டு பார்த்தோம். எங்கள் நிலம் காரத்தன்மை அதிகம் கொண்ட களிமண் நிலம். களிமண்ணின் கெட்டித் தன்மையைப் போக்குவதுதான் நாங்கள் பயிரிட்டதன் முக்கிய நோக்கம். எங்கள் நோக்கம் சரிவர நிறைவேறிவிட்டது.
மண்புழு செய்யும் வேலையை ஒவ்வொரு வெட்டிவேர் செடியும் செய்துவிட்டது. இந்த வருடம் பயிரிடும்போது கண்டிப்பாக போன வருடத்தைவிட அதிக மகசூல் கிடைக்கும். காரணம் நிலம் கடினத்தன்மை போய் காற்றோட்டம் உள்ளதாகிவிட்டது. அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும்.
மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து களை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு பதிமூன்றாம் மாதத்தில் அறுவடைதான்.
தொடர்புக்கு:
கே.சத்தியபிரபா, 4/164, எஸ்.எஸ்.காலனி, உடுமலை.
ஆர்.ராஜலட்சுமி, மொபைல்: 93810 78770.

மீனுக்கு அமுதக்கரைசல்

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.
குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,
2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்

ஜீரோ பட்ஜெட்டில் ஜொலிக்கும் ஒருங்கிணைந்தப் பண்ணையம்


ஒருங்கிணைந்த பண்ணையம் ஆர்வமூட்டும் ஒரு சமாச்சாரம். ஒன்றை ஒன்றை சார்ந்து இயங்குவது இதன் சிறப்பம்சம். அதில் ஜீரோ பட்ஜெட் இணையும்போது இதன் திறன் அதிகமாகிறது. ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பசுமை விகடன் கட்டுரைகளை ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். இது இன்னொன்று.
பத்து ஏக்கர்… இருபது ஏக்கர் என்று இருந்தாத்தான் வருமானம் பார்க்க முடியும்கறதில்ல. முறையா திட்டமிட்டா… மூணரை ஏக்கர்ல இருந்தே முத்தான வருமானத்தைப் பாக்கலாம். என்னோட பண்ணையே அதுக்கு சரியான உதாரணம்” என்று தெம்போடு சொல்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்.
இரண்டு ஏக்கரில் நெல், உளுந்து, எள் சாகுபடி; அரை ஏக்கரில் மீன்குளம் கரையில் வாழை, தென்னை, தேக்கு, தீவனப்புல், பரங்கி, கீரை, காய்கறி நாற்றுகள்; இன்னொரு அரை ஏக்கரில் நெல்லியும் அதற்கு ஊடுபயிராக கீரை, வெண்டை, மிளகாய், கத்திரி, உளுந்து என ஜீரோ பட்ஜெட் முறையில் அசத்தலாக சாகுபடி செய்து வருகிறார் மகாலிங்கம்!
”இது காவிரிப் பாசனப் பகுதி. ஆத்துல தண்ணி இல்லாத காலங்கள்ல போர்வெல்லை பயன்படுத்துவோம். மூணரை ஏக்கர்ல இந்தப் பண்ணை அமைஞ்சிருக்கு. ஆறடி வரைக்கும் களிமண்ணும், அதுக்கு கீழே நீரோட்ட மணலும் உள்ள பகுதி. ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணயத்தைத் தொடங்கி, மூணு வருஷம் முடிஞ்சிடுச்சி. இங்க இயற்கை இடுபொருட்களைக்கூட அதிகம் பயன்படுத்துறதில்ல. ஆனாலும், வளர்ச்சி அபாரமா இருக்கு. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதலே ஏற்படல.
சாணத்துக்காகவும், பாலுக்காகவும் ரெண்டு எருமைகள வெச்சிருக்கேன். இப்போதைக்கு வாழை, கீரை, காய்கறிகள், நெல், உளுந்து, மீன், பால் மூலமா வருமானம் வந்துக்கிட்டு இருக்கு. நெல்லியும், மாவும் இப்பத்தான் காய்ப்புக்கு வந்திருக்கு. தென்னை இனிமேதான் காய்ப்புக்கு வரும். ஆனா, எல்லாமே நல்ல வளர்ச்சியில இருக்கு” என்று மகிழ்ச்சியோடு சொன்ன மகாலிங்கம், தொடர்ந்தார்.
”மூணு வருஷத்துக்கு முன்ன வரைக்கும் நெல்லையும், கரும்பையும் ரசாயன முறையிலதான் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இயற்கை விவசாயத்தைப் பத்தி புரிஞ்சது. உடனே, ‘இந்த மூணரை ஏக்கர் நிலத்தையும் ஜீரோ பட்ஜெட் முறையில ஒருங்கிணைந்தப் பண்ணையமா மாத்தணும்’னு முடிவெடுத்தேன். இதைச் சொன்னதும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ‘ரசாயன உரம், பூச்சிமருந்து பயன்படுத்தலைனா… தோட்டக்கலைப் பயிர்கள் தாக்குப் பிடிக்காது. குறிப்பா, நெல்லிக்கு அது ரெண்டும் அவசியம்’னு சொன்னாங்க.
நான் அதுக்கெல்லாம் அசராம, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். ரெண்டு ஏக்கர்ல சுழற்சி முறையில சீரகச் சம்பா, உளுந்து, எள், அதிசயப் பொன்னினு சாகுபடி செய்றேன். அரை ஏக்கர்ல நெல்லியை நட்டு, இடையில காய்கறிகளையும், இன்னொரு அரை ஏக்கர்ல மீன்குளம் வெட்டி, மீனையும், குளத்தோட கரையில தென்னை, வாழை, தேக்கு, தீவனப்புல், கீரை, உளுந்து, காய்கறி நாத்துகளையும் உற்பத்தி செய்றேன்” என்றவர், ஒருங்கிணைந்தப் பண்ணையத்துக்கான சாகுபடிப் பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.

நெல், உளுந்து, எள்!

சீரகச் சம்பா ரகம் 120 நாள் வயது கொண்ட பயிர். இதைச் சம்பா பருவத்தில், அதாவது, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் நடவு செய்யலாம். இரண்டு சால் உழவு ஓட்டி, ஏக்கருக்கு நான்கு டன் தொழுவுரம், அரை டன் சாம்பல் போட்டு, மறுபடியும் ஒரு சால் உழவு ஓட்டி, சீரகச் சம்பா நாற்றுகளை சாதாரண முறையில் நடவு செய்ய வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாசனத் தண்ணீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும். 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 120-ம் நாளில் நெல் அறுவடைக்கு வரும். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்னதாக, ஏக்கருக்கு 10 கிலோ உளுந்து விதைகளை வயலில் தெளிக்கவேண்டும். நெல் அறுவடை முடிந்த 70 நாட்களில், அதாவது மார்ச் மாதக் கடைசியில் உளுந்து அறுவடை செய்யலாம்.
அதன் பிறகு, நிலத்தை நன்றாக உழுது, ஏக்கருக்கு இரண்டு கிலோ எள் விதையைத் தெளிக்க வேண்டும். விதைத்ததில் இருந்து 80-ம் நாள் எள் அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கோடை சாகுபடி போல அதிசயப் பொன்னியை விதைக்கலாம். சீரகச் சம்பா நெல்லுக்கு செய்தது போலவே இதற்கும் நிலத் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புகளையும் செய்ய வேண்டும். இதன் அறுவடை முடிந்த உடனே, மறுபடியும் சீரகச் சம்பாவுக்கான பணிகளைத் துவக்க வேண்டும். இப்படி சுழற்சி முறையில் செய்துகொண்டே இருக்கலாம்.

நெல்லியும்… ஊடுபயிர்களும்!

நான்கு சால் உழவு ஓட்டி, மண்ணை, பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழிக்கும் 5 கிலோ தொழுவுரம், கால் கிலோ வேப்பம் பிண்ணாக்கு போட்டு, நெல்லிக் கன்றை நடவு செய்து, உடனே தண்ணீர் கொடுக்க வேண்டும். ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும் (இவர் அரை ஏக்கரில் 100 கன்றுகளை நடவு செய்துள்ளார்). ஒரு மாதம் வரை 3 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு… காய்ச்சலுக்கு ஏற்ப 10 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்ய வேண்டும். ஆண்டுக்கொரு முறை கவாத்து செய்ய வேண்டும். நடவு செய்த மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கும்போது மகசூல் கிடைக்கும். படிப்படியாக அதிகரித்து, ஆறாவது ஆண்டு முதல் மரத்துக்கு 100 கிலோ வரை கிடைக்கும். (இவர் நெல்லி கன்றுகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு முதல்தான் காய்ப்புக்கு வரும்).
இரண்டு நெல்லி வரிசைக்கு இடையில், 9 அடி அகலம், ஒன்றரையடி உயரம், 50 அடி நீளத்தில் பாத்திகளை அமைத்து, ஒவ்வொரு பாத்தியிலும் கீரை, காய்கறி போன்றவற்றைச் சாகுபடி செய்யலாம். இப்படித் திட்டமிட்டுப் பயிர் செய்தால், வேலையாட்களை அதிகமாக எதிர்பார்க்கத் தேவையில்லை. விற்பனையிலும் சிரமம் இருக்காது.

மீனுக்கு அமுதக்கரைசல்!

ஒரு ஏக்கர் நிலத்தில் மையமாக குளம் வெட்ட வேண்டும். குளத்தில் தண்ணீர் நிற்கும் பரப்பு அரை ஏக்கருக்குக் குறையாமல் இருக்குமாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். குளம் வெட்டும்போது கிடைக்கும் மண்ணை வைத்து, சுற்றி கரை அமைத்துக் கொள்ள வேண்டும். ஐந்தடி ஆழத்தில் குளம் வெட்டி, அதில் 10 கிலோ சுண்ணாம்பு ஊற வைத்த தண்ணீருடன், 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து தெளித்து, ஒரு வாரத்துக்குக் குளத்தைக் காயவிட வேண்டும். குளத்தில் ஏதேனும் நச்சுக்கிருமிகள் இருந்தால், அவற்றை மஞ்சள் செயலிழக்க செய்துவிடும்.
குளம் நன்றாக காய்ந்த பிறகு, மூன்றடி உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு… ரோகு, கட்லா, மிர்கால், புல்கெண்டை வகைகளில் தலா 100 கிராம் எடையுள்ள 1,000 மீன்குஞ்சுகளை விட வேண்டும். தீவனமாக 10 கிலோ அரிசித் தவிடையும்,
2 கிலோ கோதுமைத் தவிடையும் கலந்து, தினமும் கொடுக்க வேண்டும். மீன்கள் சாப்பிடுவதைப் பொறுத்து, அளவைக் கூட்டியும் குறைத்தும் கொடுக்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தீவனப்புல்லைப் போட வேண்டும். வாரம் ஒரு முறை, 10 கிலோ பசுஞ்சாணத்தையும், பத்து நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் அமுதக்கரைசலையும், தண்ணீரில் கலந்துவிட வேண்டும். ஆறு மாதத்தில் மீன்கள் முக்கால் கிலோ எடையில் இருக்கும். அப்போது விற்பனை செய்யலாம்.

தென்னை கரையானை அரிக்கும் உப்பு!

குளக்கரையின் வெளி விளிம்பில் 10 அடி இடைவெளியில், மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து வரிசையாக தென்னங்கன்று நடவேண்டும். இவற்றைக் கரையான் அரிக்காமல் தடுக்க, நடவுக்கு முன்பாக ஒவ்வொரு குழியிலும் 100 கிராம் சாதாரண கல்உப்பு, குளத்துமண் ஆகியவற்றைப் போட்டு, தென்னங்கன்றுகளை நடவேண்டும். உடனடியாக உயிர்த் தண்ணீர் தர வேண்டும். பிறகு, தேவைக்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும். தென்னைக்கு இடையிலும், ஒரு அடி தள்ளியும் வரிசையாக தீவனப்புல்லை நடவு செய்யலாம். இதன் மூலம் இரண்டு மாடுகளுக்கு போதுமான பசுந்தீவனம் கிடைக்கும்.

வாழைக்கு இடையில் தேக்கு!

குளத்துக் கரையின் உள் விளிம்பில் 10 அடி இடைவெளியில் வரிசையாக ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, வாழையை நடவு செய்யலாம். அரை ஏக்கர் குளத்தின் கரையில் 100 கன்றுகள் வரை நடலாம். வாழை இலைகளை அவ்வப்போது, நறுக்கி குளத்தில் போட்டால், மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இரண்டு வாழைக்கு இடையில் அரை அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒரு தேக்குக் கன்றை நடவேண்டும். கரையின் நடுப்பகுதியில 10 அடிக்கு 10 அடியில் பாத்திகளை அமைத்து அதில் கீரை விதைக்கலாம். மிளகாய், கத்திரி நாற்றுகளை சொந்தத் தேவைக்கு உற்பத்தி செய்யலாம்.
மழைக் காலங்களில் கரையில் காய்கறி நாற்று உற்பத்தி செய்யமுடியாது. அப்போது கரை முழுவதும் காலியாகத்தான் இருக்கும். அந்த இடங்களில் உளுந்து விதையை ஊன்றிவிட வேண்டும். இதைத் தவிர, கரையின் ஏதாவது இரண்டு மூலைகளில் ஒரு அடி நீள, அகல, ஆழத்தில் குழியெடுத்து, ஒவ்வொரு குழியிலும் மூன்று கிலோ தொழுவுரத்தைப் போட்டு, மண்ணால் நிரப்பி, குழிக்கு மூன்று பரங்கி விதைகளை ஊன்றினால்… குறைந்தபட்சம் 50 காய்கள் கிடைக்கும்.’

இரண்டு ஏக்கரில் 1,80,000

சாகுபடி பாடம் முடித்த மகாலிங்கம், வரும்படி பற்றி பேசத் தொடங்கினார்.
”நெல்லுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கறதால முளைப்புத் திறன் நல்லா இருக்கு. ரெண்டு ஏக்கருக்கும் சேர்த்து 3,600 கிலோ சீரகச் சம்பா நெல்லு, கிடைக்குது. இதுல 2,000 கிலோ நெல்லை விதைநெல்லா விற்பனை செய்றேன். கிலோ 50 ரூபாய்னு விக்கிறது மூலமா ஒரு லட்ச ரூபாய் கிடைக்குது. மீதியுள்ள நெல்லை சொந்தத் தேவைக்காக வெச்சுக்குறேன். இதோட மதிப்பு 17 ஆயிரம் ரூபாய். அதிசயப் பொன்னி
3,600 கிலோ மகசூல் கிடைக்கும். கிலோ 11 ரூபாய் வீதம் விலைக்குக் கொடுக்கிறேன். இதுல 39,600 ரூபாய் கிடைக்கும்.
உளுந்து 300 கிலோ கிடைக்கும். அதை விதைக்காக வேளாண்துறையிலயே கிலோ 56 ரூபாய்னு வாங்கிக்கறாங்க. இதன் மூலமா 16,800 ரூபாய் கிடைக்கும். எள் 300 கிலோ கிடைக்கும். இதுல 200 கிலோ எள்ளை 40 ரூபாய்னு வித்துடுவேன். இதன் மூலமா 8,000 ரூபாய் கிடைக்கும். மீதி 100 கிலோ எள்ளை எண்ணெயா ஆட்டுவேன். 60 லிட்டர் எண்ணெயும்,
40 கிலோ புண்ணாக்கும் கிடைக்கும். எண்ணெயை வீட்டுத் தேவைக்கும், புண்ணாக்கை மாடுகளுக்கும் வெச்சுக்குவேன்.
ஆக, மொத்தத்துல ரெண்டு ஏக்கர்ல நெல், உளுந்து, எள் மூலமா வருஷத்துக்கு, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம வருமானம் கிடைக்கும்.

ஊடுபயிர் மூலம் 10,000

நெல்லி இந்த வருஷம்தான் மகசூல் கொடுக்கும். ஆனா, அதுக்கு இடையில இருக்கற ஊடுபயிர் மூலமா முன்கூட்டியே வருமானம் கிடைக்கும். காய்கறி 6,500 ரூபாய், கீரை 1,500 ரூபாய், உளுந்து 2,000 ரூபாய்னு மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது.

அரை ஏக்கரில் 60,000

அரை ஏக்கர் குளத்துல, ஆறு மாசத்துல 500 கிலோ மீன் கிடைக்கும். கிலோ நூறு ரூபாய்னு விற்பனை செய்றேன். இப்படி வருஷத்துக்கு ரெண்டு தடவை விற்பனை செய்றதன் மூலமா 1 லட்ச ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவும் போக, 60 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்குது.
குளக்கரை சாகுபடியைப் பொறுத்தவரை, உளுந்து 2,000 ரூபாய், பரங்கிக்காய் 3,000 ரூபாய், வாழை (நூறு தார்கள்) 7,500 ரூபாய்னு கிடைக்கும். ஆக, மீன் குளம், அதோட கரைனு மொத்தமா பார்த்தா… 1,12,500 ரூபாய் வருமானமா கிடைக்கும்

பால் 45,000

ரெண்டு எருமை மூலமா வருஷம் முழுக்க  சராசரியா 7 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 20 ரூபாய்னு விற்பனை பண்றேன். தினமும் ஒரு மாட்டுக்கு ஒரு கிலோ நெல் தவிடு, கால் கிலோ எள்ளுப் புண்ணாக்கு, அரை கிலோ கோதுமை தவிடும் கலந்து அடர்தீவனமா கொடுக்குறேன். கோதுமைத் தவிடை மட்டுந்தான் வெளியில காசு கொடுத்து வாங்குறேன். ரெண்டு எருமைக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு
15 ரூபாய்தான் செலவாகுது. ஒரு வருஷத்துல பால் மூலமா மட்டுமே 45 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்” என்று விலாவாரியாகச் சொன்னவர்,

”நெல்லி வருமானம் இந்த வருஷம்தான் வர ஆரம்பிக்கும். மரத்துக்கு 100 கிலோ வீதம்,

100 மரத்துக்கு 10 ஆயிரம் கிலோ நெல்லி கிடைக்கும். கிலோவுக்கு சராசரியா 15 ரூபாய் விலை கிடைச்சாலும்… மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்று எதிர்பார்ப்போடு சொன்னார்.
படங்கள்:ந. வசந்தகுமார்
தொடர்புக்கு மகாலிங்கம்,
அலைபேசி: 93457-12260.
காப்புரிமை : Pasumai Vikatan

Reference:


சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு

சிறிய குளத்தில் மீன் வளர்ப்பு


மீன் வளர்ப்புக்கு ஏக்கர் கணக்கில் குளம் தேவையில்லை. குறைந்த பரப்பிலான குளத்தில் விரால் மீன்களை வளர்த்து பலனடைந்துள்ளதாக பசுமை விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. வேலூர் மாவட்டம் அண்ணாத்துரை அவர்களின் அனுபவமாக வந்துள்ள இந்தக் கட்டுரை தனியே ஒரு குளம் வெட்டி அவர் செய்துள்ள பணிகளைக் காட்டுகிறது.
குளங்களைக் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து அனுபவம் பெற்ற இவர், விரால் வளர்ப்பில் இலாபம் உண்டு என்று கேள்விப்பட்டு கிணறு மற்றும் ஏரிகளில் வளர்த்து அதை உண்மை என்றும் அறிந்த இவர் தனது நிலத்தில் குளம் வெட்டி மீன் வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.

வளர்ப்பு முறை

ஐந்து சென்ட் நிலத்தில், எட்டு அடி ஆழ குளம் வெட்டி, இரண்டு டிராக்டர் களிமண் கொண்டு நிரப்பி… 5 அடி உயரத்துக்கு தண்ணீரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். தண்ணீர் அதிகமாக நிறுத்தும்போது, வெயிலின் தாக்கம் குறைவாகவும், திருட்டுப் போகாமலும் இருக்கும். தண்ணீர் நிரப்பிய பிறகு 2,000 விரால் மீன்குஞ்சுகளைக் குளத்தில் விடவேண்டும். ஒரு மாத வயதுடைய குஞ்சுகளாகப் பார்த்து வாங்கி விடுவதுதான் நல்லது. அதற்கும் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால்… சேதாரம் அதிகமாக இருக்கும். ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடுவதும் முக்கியம். இல்லாவிட்டால், பெரியக் குஞ்சுகள், சிறியக் குஞ்சுகளைத் தின்றுவிடும். மீன்குஞ்சு விட்ட மறுநாள், தாமரை அல்லது அல்லிக் கிழங்குகளில் நான்கை ஏரிகளில் இருந்து எடுத்து வந்து, குளத்தின் நான்கு பகுதிகளிலும், கரையில் இருந்து ஐந்து அடி இடைவெளிவிட்டு, குளத்துக்குள் ஊன்றிவிட வேண்டும். கிழங்கு வளர்ந்து படர்ந்து விடும். அவற்றின் நிழல் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் நேரங்களில் மீன்கள் வந்து தங்கிக்கொள்ளும்.

தீவனச் சேதத்தைக் குறைக்கும் தெர்மாக்கூல்!

மீன்குஞ்சுகளுக்கு, தீவனம் கொடுப்பதற்கு தெர்மாக்கூல் அட்டையை தண்ணீரோடு ஒட்டி இருப்பது போன்று நான்கு இடங்களில் வைக்க வேண்டும். குச்சிகளை நட்டு, அதன் மேல் தெர்மாக்கூல் அட்டையைக் குத்தி வைக்கலாம். தெர்மாக்கூல் மீது தீவனத்தைப் போட வேண்டும். மீன்கள் தெர்மாக்கூல் மீது ஏறி, தீவனத்தைச் சாப்பிடும். இதனால் தீவன சேதாரம் ஏற்படாது.
கடலைப் பிண்ணாக்குத் தூளை ஆரம்பத்திலிருந்து 20 நாட்கள் வரை 2 கிலோவும்; அடுத்த 10 நாட்களுக்கு 6 கிலோவும்; அடுத்த 15 நாட்களுக்கு 10 கிலோவும் இட வேண்டும். அதற்கு பிறகு, தீவனத்துக்காக 10 கிலோ ஜிலேபி மீனைக் குளத்துக்குள் விடவேண்டும். இவற்றிலிருந்து உற்பத்தியாகும் மீன்குஞ்சுகளை, விரால் மீன்கள் சாப்பிட்டுக் கொள்ளும்.
45-ம் நாளுக்கு மேல் 75-ம் நாள் வரை தினமும் 10 கிலோ கோழிக்குடல்களை வேகவைத்து ஒரு அங்குல நீளமுள்ளதாக வெட்டிப் போட வேண்டும். 75-ம் நாள் முதல் 100 நாட்கள் வரை தினமும் 25 கிலோ; 100-வது நாளில் இருந்து 240-வது நாள் வரை (எட்டாம் மாதம் வரை) தினமும் 35 கிலோ என்ற அளவுகளில் கோழிக்குடலை வெட்டி, காலை, மாலை என்று இரண்டாகப் பிரித்து தீவனமாக இடவேண்டும்.
60-ம் நாள் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற வகைகளில் இரண்டு மாத வயதுடைய 500 குஞ்சுகளைக் குளத்தில்விட வேண்டும். இப்படி செய்யும்போது, மேல் பகுதியில் இருக்கும் புழுக்கள் மற்றும் தீவனங்களை சாப்பிட்டே இந்த குஞ்சுகள் எளிதாக வளர்ந்துவிடும்.

எட்டு மாதத்தில் முக்கால் கிலோ!

விரால் மீனை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க… மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். விராலைப் பொறுத்தவரை அம்மை நோய்தான் தாக்கும். அம்மைத் தாக்குதல் தென்பட்டால், 5 கிலோ மஞ்சள் தூளில், ஒரு கிலோ கல் உப்பைக் கலந்து, குளத்து நீரில் கலந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் சரியாகி விடும்.
இந்தப் பராமரிப்பு மட்டும் செய்தாலே… நான்கு மாதத்தில் 400 முதல் 500 கிராம் எடையும்; எட்டு மாதத்தில் முக்கால் கிலோ முதல் ஒரு கிலோ எடையும் வந்துவிடும்.’

ஐந்து சென்டில்… 1,25,000!

நிறைவாக விற்பனை, வருமானம் பற்றி விளக்க ஆரம்பித்த அண்ணாதுரை, ”5 சென்ட் குளத்துல விடப்பட்ட 2,000 மீன்குஞ்சுகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 1,000 மீன் கிடைக்கும்.
எட்டு மாசத்துல சராசரியாக முக்கால் கிலோ அளவுக்கு வளர்ந்துடும்னு வெச்சுக்கிட்டா… மொத்தம் 750 கிலோ மீன்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்தா கிலோ 150 ரூபாய் விலையிலயும், நேரடியா விற்பனை செய்தா கிலோ 200 ரூபாய் விலையிலயும் விற்க முடியும். நான் நேரடியாத்தான் விற்கிறேன். கிலோ 200 ரூபாய் வீதம் 750 கிலோவுக்கு 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
60-ம் நாள் குளத்துல விட்ட ரோகு, கட்லா வகைகள்ல பாதிக்குப் பாதி சேதாரமா போனாலும், 250 மீன்கள் கிடைக்கும். இதுவும் சராசரியா முக்கால் கிலோ எடைனு வெச்சுக்கிட்டாலும்… மொத்தம் 187 கிலோ மீன் கிடைக்கும். கிலோ 100 ரூபாய் வீதம் விற்பனை செய்தா 18 ஆயிரத்து 700 ரூபாய் கிடைக்கும். ஆகமொத்தம் 5 சென்ட் நிலத்துல இருந்து 8 மாசத்துல 1 லட்சத்தி 68 ஆயிரத்தி 700 ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக… 1 லட்சத்தி
25 ஆயிரம் ரூபாய் லாபமா கையில நிக்கும்’