செலவு சின்ன மீன்... வரவு பெரிய மீன்!
ப சியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக்கற்றுக்கொடு’ என்பார்கள். அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கம்பீரமாக களத்தில் குதித்திருக்கிறார்
அகமது மொகைதீன். மீன்பண்ணை அமைத்து, தனிமனிதன் தன் பொருளா தார வளத்தை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்பதற்கு உதாரணமாக இருப்பதோடு, அதையே பிறருக்குச் சொல்லித் தரும் வேலையையும் செய்து வருகிறார்.
மதுரை, ஒத்தக்கடை அருகே அரும்பனூரில் 'ஏ.எம்.அக்வா ஃபார்ம்' என்ற பெயரில் மீன் பண்ணை நடத்தி வரும் மொகைதீன், '‘சில ஆயிரங்களும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் போதும். மீன்கள் வளர்த்து மாதம் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்'' என்று இளைஞர்களுக்கு அழைப்பு வைக்கிறார்.
பத்து ஏக்கர் பரப்பளவிலான தோட்டம்... அதில் ஆறு ஏக்கரில் நிமிர்ந்து நிற்கிறது தென்னந்தோப்பு. மீதமுள்ள பகுதியில் நெல், வாழை என விவசாயம் விரிந்து கிடக்க... தென்னை மரங்களுக்கு இடையில் நீள, நீளமான குழிகளில் தண்ணீர் அலையடிக்கிறது. அதுதான் அவரின் மீன் பண்ணை.
பொருளாதாரப் படிப்பை முடித்த கையோடு சவுதி அரேபியாவுக்குப் பறந்தவர், அங்கே வேலை அவ்வளவு சிறப்பானதாக இல்லாது போகவே, ஒரு கட்டத்தில் இந்தியாவுக்கு திரும்பியிருக்கிறார். வந்த வேகத்தில் பூர்வீக நிலத்தில் விவசாயத்தை ஆரம்பித்தவர்... படிப்படியாக முன்னேறி, இன்றைக்கு மீன்பண்ணை வரை வந்திருக்கிறார்.
மேற்கொண்டு அவரே சொல்கிறார் கேட்போம்...
''எங்க கிணத்துல தண்ணி எப்பவுமே வத்தாது. அதை வெச்சித்தான் மீன் பண்ணை போடலாம்னு முடிவு பண்ணினேன். பல இடங்களுக்கும் போய் மீன் பண்ணைகளைப் பாத்து விஷயங்களை தெரிஞ்சிகிட்டு, எனக்கு ஏத்த மாதிரி இந்தப் பண்ணையை அமைச்சேன். சிமென்ட் தொட்டி களைக் கட்டினா அதிகமா செலவாகும். அதனால தென்னை மரங்களுக்கு இடையில குழிகளை வெட்டி அதில் தண்ணியை விட்டு மீன் குஞ்சுகளை வளர்க்க ஆரம்பிச்சேன். என்னோட முயற்சி வெற்றிகரமா அமைஞ்சி போச்சி.
தரமான மீன் குஞ்சுகள் கிடைக்கறதுல சிக்கல் இருந்திச்சி. நானே தரமான குஞ்சுகளை தேடிப்பிடிச்சி வாங்கி வந்ததோட, அதை என்னோட பண்ணையிலயும் உற்பத்தி பண்ணி விக்க ஆரம்பிச்சிட்டேன். பொறிச்சி மூணே நாள் ஆன குஞ்சுகளை பவானிசாகர், கொல்கத்தாவுல இருந்தெல்லாம் வாங்கி, ரெண்டு மாசம் வரை என்னோட பண்ணையில வளர்க்கிறேன். அதுக்குப் பிறகு மற்ற பண்ணைகளுக்கு விக்கிறேன்.
குளத்து மீன் வகைகளைப் பொறுத்தவரை கட்லா, ரோகு, கண்ணாடி கெண்டை, சில்வர் கெண்டை, பொட்லா, மிர்கால், வாளை, நாட்டு விரால், புல் கெண்டை மாதிரியான ரக குஞ்சுகளை உற்பத்தி செய்றேன். லட்சக்கணக்கான குஞ்சுகளை உற்பத்தி பண்ணினாலும், எல்லாம் வித்துருது. கவர்மென்ட் ஆர்டர், தனியார் ஆர்டர்னு தொடர்ந்து வாங்கிக்கிட்டே இருக்காங்க. திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள்ல அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் குளத்துல மீன் வளக்கறாங்க. அதுக்கும் நான்தான் மீன் குஞ்சுகள கொடுக்கறேன். தென்மாவட்டத்தைப் பொறுத்தவரை குளத்து மீன் வளக்கற ரொம்ப பேரு எங்கிட்ட வாங்குறாங்க. மீன் குஞ்சு ஒண்ணுக்கு இருபது பைசாவில் இருந்து எண்பது பைசா வரைக்கும் ரகத்துக்கு ஏத்தா மாதிரி விலை இருக்கும்.
தண்ணீர் ரொம்ப குறைவா கிடைக்கற காலத்துல தென்னைக்கு இடையே சிமென்ட் சிலாப்களை வெச்சி, அதுல வண்ண வண்ண மீன்களை வளக்கறேன். அதுக்கான சந்தை வாய்ப்பும் நல்லா இருக்கு'' என்று கொஞ்சம் நிறுத்தினார் மொகைதீன்.
மீன் வளர்ப்பில் இவருடைய கொடி வெகுவாக பறக்கவே, 'தமிழ்நாடு மீன் வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க’த்தின் தென்மாவட்ட அமைப்பாளர் என்ற பதவி வந்து சேர்ந்திருக்கிறது. அத்துடன், மீன் பண்ணையையும் சிறப்பாக நடத்துவதால், அரசுத் தரப்பலிருந்து நடத்தப்படும் மீன் வளர்ப்பு பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்பட்டு பலருக்கும் பயிற்சி கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறார் மொகைதீன்.
சரி, மீன் வளர்ப்பு எல்லோருக்கும் சாத்தியமா... அதைப் பற்றி என்ன சொல்கிறார் மொகைதீன்?
“பொதுவா இருபது ஏக்கர் நிலத்தில விவசாயம் செஞ்சு கிடைக்கிற லாபத்தை, ஒரு ஏக்கர்ல மீன் வளர்த்தாலே எடுத்துறலாம். அதனாலயே இப்ப விவசாயிகள் பலரும் மீன் வளர்ப்புல அதிக ஆர்வம் காட்ட ஆரம்பிச்சிருக்காங்க. முப்பதாயிரம் ரூபாய் பணம், அரை ஏக்கர் இடம், தண்ணி இது மூணும் இருந்தா போதும்... யார் வேணும்னாலும் மீன் வளர்ப்பை ஆரம்பிச்சிடலாம். வர்ற வருமானத்தைப் பொறுத்து மீன் வளர்ப்பையும் விரிவு படுத்திக்கலாம். தென்னை விவசாயம் மட்டும் செய்றவங்களுக்கு வரப்பிரசாதமான தொழில் இது. ஊடு பயிர் போடறதுக்குப் பதிலா தென்னை மரங்களுக்கு நடுவுலயே குழி எடுத்து மீனை வளக்கலாம்.
அதிக செலவாகும்னு நெனச்சுகிட்டுதான் ரொம்ப பேரு இந்தத் துறைக்கு வரத் தயங்குறாங்க. உண்மையில சொல்லப்போனா... செலவு ரொம்ப கம்மி, வருமானம் ஜாஸ்தி. இதை அனுபவத்துல உணர்ந்தவன் நான். மீனை வளர்த்து எங்க விக்கறதுனு ஒரு கேள்வி வரும். நீங்க எங்கயும் அலைய வேணாம். மீன் இருக்குதுனு தெரிஞ்சா வியாபாரிகளே தன்னால வந்து வாங்கிட்டு போயிடுவாங்க. மீன்வளத்துறையில இருந்தும் உதவிகள் கிடைக்கும். நம்ம நாட்டுத் தேவையில பத்தில ஒரு பங்குகூட நாம் இன்னும் உற்பத்தி செய்யல. மீன் உணவின் தேவை ரொம்ப அதிகம். அதனால விற்பனை ஒரு பிரச்னையே இல்லை'' என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் பேசி முடித்த மொகைதீன்,
''மீன் வளர்ப்பு சம்பந்தமாக ஏதாவது சந்தேகங்கள் இருந்தாலும் நேரிலோ போன்லயோ என்கிட்ட கேட்கலாம். எப்பவும் ஆலோசனைகள் சொல்லத் தயாரா இருக்கேன். பயிற்சிக்காக என்கிட்ட வந்தா இலவசமாகவே சொல்லித் தரவும் தயார்'' என்றார்.
தொடர்பு முகவரி: அகமது மொகைதீன், அரும்பனூர் (அஞ்சல்), வேளாண்மை கல்லூரி (வழி) மதுரை-625104, போன்: 98431-70706, 0452- 3293426.
வரவு எப்படி?
மீன் வளர்ப்பின் வருவாய் எப்படி என்பதை கெண்டை மீனை உதாரணமாக எடுத்துக் கொண்டு சொல்கிறார் மொகைதீன்:
அரை ஏக்கரில் மீன் வளர்ப்பதாக வைத்துக் கொள் வோம். ஒரு மீன் குஞ்சு அம்பது பைசா வீதம் இருபதாயிரம் குஞ்சுகள் வாங்கவேண்டும். அதன் விலை பத்தாயிரம் ரூபாய். அதில் இருபது முதல் ஐம்பது சதவிகித குஞ்சுகள் தேறிவிடும். இருபது சதவிகிதம் தேறுகிறது என்று எடுத்துக்கொண்டலே... நான்காயிரம் மீன்கள் கிடைக்கும். ஆறு மாதம் வளர்ந்த நிலையில் ஒரு மீன் சராசரியாக ஒரு கிலோ எடை இருக்கும். மொத்தம் நான்கு டன் மீன்கள் கிடைக்கும். ஒரு கிலோ மீன் குறைந்தபட்சம் முப்பது ரூபாய் போகும் என்று வைத்துக்கொண்டால்... 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவெல்லாம் போக... கையில் 80 ஆயிரம் ரூபாய் நிச்சயம் கிடைக்கும். மாதத்துக்கு சராசரி யாக 13 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.
குழிகளை அமைப்பது எப்படி?
தென்னை மரங்களுக்கு நடுவே நூத்தி இருபதடி நீளம், பத்தடி அகலம், அஞ்சடி ஆழம் இதுதான் ஒரு குழிக்கான கணக்கு. மீன் குஞ்சு வளர்ப்பு மட்டும் செய்ய நினைப்பவர்கள் மூணு அடி ஆழம் வைத்துக்கொண்டால் போதும். குழியில் கரம்பை மண்ணைக் கொட்டி, தண்ணீர் விட்டு மீன் குஞ்சுகளை வளர்க்கலாம். சரியான மண் கிடைக்கவில்லை என்றால் குழிக்குள் பிளாஸ்டிக் ஷீட் போட்டு, அதில் தண்ணீரை விட்டும் வளர்க்கலாம்.
கிராமத்து விவசாயிகளுக்கு சுலபமாக கிடைக்கும் மாட்டுச் சாணம், தவிடு, கொஞ்சம் புண்ணாக்கு, கருவாட்டு தூள் இதெல்லாம் மீன்களுக்கு உணவாகக் கொடுக்கலாம்.
|
No comments:
Post a Comment